சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டி - சரத்குமார் அறிவிப்பு


சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டி - சரத்குமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2021 10:24 PM GMT (Updated: 18 Jan 2021 10:24 PM GMT)

சமத்துவ மக்கள் கட்சிக்கு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதேவேளை சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட இருக்கிறோம் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.

சென்னை, 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில-மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் கூட்டம், சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கட்சி அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தலைமை தாங்கினார். மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், துணை பொதுச்செயலாளர் எம்.ஏ.சேவியர், தலைமை நிலைய செயலாளர் பாகீரதி, இளைஞரணி துணை செயலாளர் கிச்சா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தின்போது சமத்துவ மக்கள் கட்சியின் புதிய கொடியையும், புதிய கரை வேட்டியையும் சரத்குமார் அறிமுகப்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து சரத்குமார் பேசியதாவது:-

சமத்துவ மக்கள் கட்சியின் கொடியை போலவே ஓரிரு கட்சி கொடிகள் இருக்கின்றன. எனவே நம்மை தனித்துவமாக அடையாளப்படுத்தவே புதிய கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் கட்சியின் பொறுப்பாளர்கள், துணை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சூரியவம்சம் படத்துக்கு பிறகு மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வந்தேன். 1996-ம் ஆண்டில் அ.தி.மு. க.வுக்கு எதிராக 40 நாட்கள் கடுமையாக பிரசாரம் மேற்கொண்டேன். அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வர எனது பிரசாரமே முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். மனதில் பட்டதை வெளிப்படையாகவே பேசிவிடுவேன். சீட்டில் எழுதிவைத்துக் கொண்டோ, அந்த சீட்டை பார்த்தும் தவறாக படிக்கும் பழக்கமோ எனக்கில்லை.

தற்போது வரை அ.தி.மு.க. கூட்டணியில் தான் சமத்துவ மக்கள் கட்சி இருக்கிறது. ஆனாலும் தேர்தல் நெருங்குவதால், எங்கள் கட்சிக்கு தொகுதி பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறோம். அந்தவகையில் ஆலங்குளம், சங்ககிரி தொகுதிகளுக்கு நானும், வேளச்சேரி தொகுதிக்கு ராதிகாவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறோம். தேர்தலில் நான் போட்டியிடுவது இறைவன் மற்றும் மக்கள் கையில் உள்ளது. மக்கள் சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன்.

இந்தமுறை தேர்தலையொட்டி சமத்துவ மக்கள் கட்சி எடுக்கும் முடிவு தெளிவானதாக, நேர்மையானதாக இருக்கும். அதேபோல வருகிற 28-ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளேன் என்று அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாதி அடிப்படையில் முத்திரை குத்தி என்னை ஒதுக்க சிலர் முயற்சிக்கிறார்கள். சாதி உணர்வு இருந்தாலும், நான் என்றுமே சமத்துவ தலைவன் தான். இந்தமுறை எந்த முடிவு கிடைத்தாலும் நாங்கள் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம்.

அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு இன்னும் எங்களை அழைக்கவில்லை. ஆனால் அதற்காக கடந்தமுறை போல ஓரிரு தொகுதிகள் கொடுத்தால் நாங்கள் உடன்பட மாட்டோம். எங்கள் தகுதிக்கேற்ப இடங்கள் தேவை. தேர்தலில் பல வியூகங்கள் வகுக்கப்படலாம். அதில் சிறந்தது எதுவோ அதை தேர்வு செய்வோம். தனித்து நிற்பது தான் முடிவு என்றால் அதனை செய்யவும் தயங்கமாட்டோம். ஆனால் இன்னும் நேரம் இருக்கிறது. அதேவேளை தி.மு.க.வுடன் நிச்சயம் நான் கூட்டணி வைக்கமாட்டேன் என்று சரத்குமார் கூறினார்.

Next Story