தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் குறைந்தது: 4 மாவட்டங்களில் மட்டும் உயிரிழப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Jan 2021 10:42 PM GMT (Updated: 18 Jan 2021 10:42 PM GMT)

தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் குறைந்தது. நேற்று 4 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 316 ஆண்கள், 235 பெண்கள் என மொத்தம் 551 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 158 பேரும், கோவையில் 69 பேரும், செங்கல்பட்டில் 40 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரியில் தலா இருவரும், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கையில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரம்பலூரில் புதிய பாதிப்பு இல்லை. இந்த பட்டியலில், 12 வயதுக்குட்பட்ட 41 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 127 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 49 லட்சத்து 71 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 477 ஆண்களும், 3 லட்சத்து 28 ஆயிரத்து 812 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 29 ஆயிரத்து 980 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 693 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 8-ந்தேதி முதல் நேற்று வரை தமிழகம் வந்த 518 பேரில், 360 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 299 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 59 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 8 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 4 பேரும், வேலூரில் இருவரும், கோவை, புதுக்கோட்டையில் தலா ஒருவரும் என 4 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 12,272 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 758 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 180 பேரும், கோவையில் 81 பேரும், செங்கல்பட்டில் 50 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 13 ஆயிரத்து 326 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் 5 ஆயிரத்து 725 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 940, வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 1,031 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4,546, பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேருக்கு என மொத்தம் 6 ஆயிரத்து 979 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 68 அரசு, 184 தனியார் நிறுவனம் என 252 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story