இலங்கையில் ஆதிசிவன் அய்யனார் கோவில் உடைப்பு: இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 Jan 2021 7:56 PM GMT (Updated: 19 Jan 2021 7:56 PM GMT)

இலங்கையில் ஆதிசிவன் அய்யனார் கோவில் உடைப்பு சம்பவத்திற்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற குமுளமுளை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில், தமிழ் மக்கள் வழிபட்டு வந்த கிராமிய ஆதிசிவன் அய்யனார் கோவில், சூலம் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இலங்கை ராணுவத்தினரின் உதவியுடன் உடைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் செய்யப்பட்டுள்ளன. இதனால் தமிழர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் அந்த இடத்தில் இருந்து பவுத்த கல்வெட்டுகளும், சிதைவுகளும் மீட்கப்பட்டன என்றும், பவுத்தர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்றும் கூறி, மேலும் ஒரு பவுத்த விகார் கட்டி, புத்தர் சிலையும் அமைத்து விடுவார்கள் என தமிழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கேள்வி கேட்பார் இல்லை என்ற ஆணவத்தில், இலங்கை அரசு தொடர்ந்து அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் இலங்கைக்கு சென்று வந்த வெளியுறவுத்துறை மந்திரி, தனது பயணத்தில் சாதித்தது என்ன? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்து கோவில்களை இடிப்பது குறித்து, இந்திய அரசின் கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story