அமைச்சர் காமராஜ் உடல்நிலை கவலைக்கிடம்: எக்மோ கருவி பொருத்த டாக்டர்கள் முடிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 Jan 2021 10:55 PM GMT (Updated: 19 Jan 2021 10:55 PM GMT)

அமைச்சர் காமராஜின் உடல்நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து, அவருக்கு எக்மோ கருவி பொருத்த டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை,

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அமைச்சர் காமராஜூவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடல்நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து எக்மோ கருவி பொருத்த டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், இம்மாத தொடக்கத்தில் சொந்த ஊரான மன்னார்குடியில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு விழாவில் பங்கேற்றார். பின்னர், சென்னை திரும்பும் வழியில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 5-ந் தேதி சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனாவை கண்டுபிடிக்கும் ஆா்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டத்தில், பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அங்கேயே சிகிச்சை மேற்கொண்டார். பின்னர், 7-ந் தேதி அவருக்கு எடுக்கப்பட்ட சி.டி. ஸ்கேன் பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

அமைச்சர் ஆர்.காமராஜூவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற தகவலை ஆஸ்பத்திரி நிர்வாகமே வெளியிட்டது. ஒருசில நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அவர், பின்னர் வீடு திரும்பினார். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு அவர் சென்றார்.

இந்த நிலையில், மீண்டும் அமைச்சர் காமராஜூவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவசர அவசரமாக அவர் சென்னை திரும்பினார். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் மீண்டும் மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை அமைச்சர் காமராஜூவுக்கு மூச்சுத்திணறல் மேலும் அதிகமானது. இதனால், அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததால், எக்மோ சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுவினர் முடிவு செய்தனர். இந்த நேரத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்தும், சிகிச்சை அளிக்கும் முறை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு 8.15 மணி அளவில் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் வேன் மூலம் அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு அமைச்சர் காமராஜ் கொண்டு செல்லப்பட்டார்.

அங்குள்ள டாக்டர்கள் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இரவோடு இரவாக அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே அமைச்சர் காமராஜின் உடல்நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு வந்து அமைச்சர் காமராஜை பார்த்தனர். அவரது குடும்பத்தினரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும் சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடமும் அமைச்சர் காமராஜூக்கு அளிக்கும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தனர்.

ஏற்கனவே, தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, தி.மு.க. எம்.எல்.ஏ. (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி) ஜெ.அன்பழகன் ஆகியோர் மரணம் அடைந்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள் பி.தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், நிலோபர் கபில் ஆகியோரும், 16 எம்.எல்.ஏ.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மீண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், உணவுத்துறை அமைச்சர் காமராஜூவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

Next Story