போதைப்பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் சென்னையில் அதிரடி கைது


போதைப்பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் சென்னையில் அதிரடி கைது
x
தினத்தந்தி 22 Jan 2021 11:56 PM GMT (Updated: 22 Jan 2021 11:56 PM GMT)

தூத்துக்குடியில் பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி தூத்துக்குடியில் பெரிய அளவில் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கையைச் சேர்ந்த 6 பேர் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருட்களை கடத்திவர பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

தூத்துக்குடி வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் சென்னை காரம்பாக்கத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார் நேற்று அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களது பெயர் நவாஸ், முகமது அப்னாஸ் ஆகும். அவர்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசித்து வந்துள்ளனர். அவர்களிடம் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை. சட்டவிரோதமாக சென்னையில் தங்கி இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்கள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், மாலத்தீவு மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் பெரிய அளவில் தொடர்பு வைத்துள்ளனர். மேலும் இலங்கை சிறையில் உள்ள பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் சிறையில் இருந்தபடியே இவர்களோடு தொடர்பில் உள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. ஈரான் துறைமுகத்தையும் இவர்கள் ஹெராயின் கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு சர்வதேச கடத்தல்காரர்களுடன் இவர்கள் பெரும்பாலும் மீன்பிடி படகுகளில் சென்று நடுக்கடலில்தான் சந்தித்துப் பேசுவார்களாம். ஹெராயின் கடத்தலில் இந்தக் கும்பல் சர்வதேச அளவில் கொடிகட்டிப் பறந்துள்ளது. இக்கும்பலை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார், இலங்கை, ஆஸ்திரேலியா நாட்டு போலீசாருடன் இணைந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story