ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்


ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jan 2021 2:33 AM GMT (Updated: 23 Jan 2021 2:33 AM GMT)

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னை, 

27-ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும். கட்சி தலைமை அனுமதி இல்லாமல் யாரும் பேட்டி தரக்கூடாது என்று சென்னையில் நடந்த அ.தி.மு.க. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.

அ.தி.மு.க. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார் உள்பட அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர். காலை 10.15 மணிக்கு தொடங்கிய கூட்டம் 11 மணியளவில் முடிந்தது.

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசியதாக வெளியான தகவல் வருமாறு:-

சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க.வினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கண்டிப்புடன் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறும் கூட்டம் முடிவடைந்தவுடன் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளிப்பது வழக்கம். அதன்படி அவர் பேட்டியளிப்பார் என்று நிருபர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் நேற்று பேட்டி எதுவும் அளிக்கவில்லை. அவரிடம் நிருபர்கள் பேட்டி கேட்டதற்கு, கையெடுத்து கும்பிட்டபடி சிரித்த முகத்துடன் சென்றுவிட்டார்.

கட்சி தலைமை ஒப்புதல் இல்லாமல் யாரும் பேட்டி தரக் கூடாது என்று கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டிப்புடன் கூறியதால்தான் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளிக்காமல் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தநிலையில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் குறித்து அக்கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜெயலலிதா நினைவிட வளாகம் 27-ந்தேதி அன்று திறக்கப்படுவதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது குறித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story