வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கிறார் பிரதமர் மோடி - ராகுல்காந்தி


வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கிறார் பிரதமர் மோடி - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 23 Jan 2021 7:03 AM GMT (Updated: 23 Jan 2021 7:03 AM GMT)

வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை பிரதமர் மோடி வஞ்சித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கோவை, 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன. 

இதனைத்தொடர்ந்து தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி, ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. அதன்படி பொங்கல் தினத்தன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார். 

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தமிழகம் வந்தடைந்தார். கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட காங்கிரஸ் அனைத்துவித ஏற்பாடுகளையும் செய்திருந்தது.  

பின்னர் கோவையில் தனது பிரச்சாரத்தின்போது பேசிய ராகுல் காந்தி, “தமிழக மக்களிடம் இருந்து இந்தியாவின் பிற பகுதி மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும். தமிழகத்திடம் எனக்கு உள்ள உறவு, அரசியல் ரீதியான உறவு அல்ல. என் மனதிலிருந்து தோன்றும் ரத்தப்பிணைப்புடன் இணைந்த ஓர் உணர்வு. நான் தமிழகத்திற்கு எந்தவித சுயநலத்துடனும் வரவில்லை. வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கிறார் பிரதமர் மோடி. தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார்” என்று கூறினார்.

முன்னதாக தமிழ்நாடு வருகை தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கொங்கு நாட்டில் எனது தமிழ் சகோதர சகோதரிகளுடன் நேரத்தை செலவிட இன்று தமிழ்நாட்டிற்கு திரும்பி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மோடி அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தமிழர்களின் தனித்துவமான கலாச்சாரத்தை நாங்கள் பாதுகாப்போம்” என்று பதிவிட்டிருந்தார். 

சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். 


Next Story