பெண் காவலருடன் வீட்டுக்குள் இருந்த போலீஸ்காரரை பணி நீக்கம் செய்த ஐ.ஜி. உத்தரவு ரத்து - ஐகோர்ட்டு தீர்ப்பு


பெண் காவலருடன் வீட்டுக்குள் இருந்த போலீஸ்காரரை பணி நீக்கம் செய்த ஐ.ஜி. உத்தரவு ரத்து - ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Jan 2021 11:16 PM GMT (Updated: 23 Jan 2021 11:16 PM GMT)

பெண் காவலருடன் வீட்டுக்குள் இருந்த ஆண் போலீஸ்காரரை பணி நீக்கம் செய்த ஆயுதப்படை ஐ.ஜி., உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை,

தமிழக காவல்துறையில் காவலராக 1997-ம் ஆண்டு சரவணபாபு என்பவர் சேர்ந்தார். காவல்துறை ஒதுக்கீடு செய்த குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார். கடந்த 1998-ம் ஆண்டு சரவணபாபு தனது வீட்டுக்குள் பெண் காவலர் ஒருவருடன் இருந்தார். இதை கேள்விப்பட்டு அங்கு வந்த அதிகாரிகள் இருவரையும் பிடித்தனர். பின்னர், சரவணபாபுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விசாரணை நடத்தினர். அதில், 12 பேர் சாட்சி அளித்தனர். இதையடுத்து, சரவணபாபு தவறான செயலுக்காக பெண் காவலருடன் வீட்டுக்குள் இருந்தார் என்று கூறி, அவருக்கு 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து தமிழ்நாடு ஆயுதப்படை ஐ.ஜி.யிடம் சரவணபாபு மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த ஐ.ஜி., குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி, அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் சரவணபாபு வழக்கு தொடர்ந்து, பணி நீக்கத்துக்கு தடை பெற்றார்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சிங்காரவேலன், ‘‘வீட்டில் இருந்த மனுதாரரை பார்க்க பெண் காவலர் வந்துள்ளார். அவர்கள் வீட்டுக்குள் தவறான செயலில் ஈடுபட்டனர் என்று எந்த ஆதாரமும் இல்லை. அவ்வாறு அதிகாரிகள் முடிவுக்கும் வர முடியாது. எனவே, மனுதாரரை பணி நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிடுவது நியாயமற்றது’’ என்று வாதிட்டார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் கே.மகேஷ், ‘‘காவல் துறை என்பது ஒழுக்கம் மற்றும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டிய துறையாகும். மனுதாரர் வீட்டுக்குள் இருந்த பெண் காவலருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது. அவரையும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். அதுபோல மனுதாரரையும் பணி நீக்கம் செய்தது தவறில்லை’’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் விசாரணையின்போது எழுத்துப்பூர்வமாக கொடுத்த விளக்கத்தில், ‘‘வீட்டில் குளித்துக் கொண்டிருந்தேன். யாரோ கதவை தட்டினார்கள். கதவை திறந்து பார்த்தபோது, பெண் காவலர் வந்திருந்தார். அவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு பெண் காவலரை பார்க்க வந்ததாகவும், ஆனால் வீட்டு கதவு பூட்டப்பட்டுள்ளதால், அந்த வீட்டின் சாவி உள்ளதா? என்று கேட்டார். அதற்குள் வெளிப்பக்கமாக என் வீட்டு கதவை யாரோ பூட்டி விட்டார்கள். என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர்’’ என்று கூறியுள்ளார்.

அவர் கூறியது போலவே, வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது என்று 12 சாட்சிகளும் கூறியுள்ளனர். பூட்டிய வீட்டிற்குள் காவலர்கள் இருவரும் தவறான நோக்கத்துடன் தான் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை. எனவே, வீட்டுக்குள் ஆண், பெண் காவலர்கள் குறிப்பிட்ட நேரம் இருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், மனுதாரரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்கிறேன். மனுதாரர் பணி பலன் அனைத்தையும் பெற தகுதியானவர் என்று உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story