மாநில செய்திகள்

ஓசூர் நிதி நிறுவனத்தில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் சிக்கியது - 25 கிலோ நகைகள், 7 துப்பாக்கிகள் பறிமுதல் + "||" + Hosur finance company robbery gang caught - 25 kg of jewelery, 7 guns Seized

ஓசூர் நிதி நிறுவனத்தில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் சிக்கியது - 25 கிலோ நகைகள், 7 துப்பாக்கிகள் பறிமுதல்

ஓசூர் நிதி நிறுவனத்தில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் சிக்கியது - 25 கிலோ நகைகள், 7 துப்பாக்கிகள் பறிமுதல்
ஓசூர் நிதி நிறுவனத்தில் நேற்று முன்தினம் கைவரிசை காட்டிய வடநாட்டு கொள்ளை கும்பலை 18 மணி நேரத்தில் போலீசார் சுற்றி வளைத்தனர்.
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பலரும் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்தபடி 7 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் கையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை காட்டி நிதிநிறுவன மேலாளர், ஊழியர்களை தாக்கி சத்தம் போடாமல் இருக்க வாயை பிளாஸ்திரியால் ஒட்டினார்கள்.

பின்னர் பாதுகாப்பு பெட்டக சாவிகளை வாங்கி அங்கிருந்த 25 கிலோ (25 ஆயிரத்து 91 கிராம்) தங்க நகைகள், ரூ.93 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 செல்போன், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை கொள்ளையடித்து கொண்டு சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.12 கோடியாகும்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

போலீஸ் அதிகாரிகள் கொள்ளை நடந்த நிதி நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் ஆனேக்கல் வழியாக தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

மேலும் கொள்ளையர்கள் நிதிநிறுவனத்தில் இருந்து நகைகளை எடுத்து சென்ற பைகளில் இருந்த ஜி.பி.எஸ். கருவியை வைத்தும், அவர்கள் நிதிநிறுவனத்தில் இருந்து எடுத்து சென்ற மேலாளர் சீனிவாச ராகவாவின் செல்போன் மூலமாக யாரிடம் பேசினார்கள் என்றும் பார்த்தனர்.

இதன் மூலம் கொள்ளையர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஷம்ஷாபாத் பகுதி வழியாக தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஷம்ஷாபாத் சுங்கச்சாவடி அருகில் கொள்ளையர்கள் ஒரு கார் மற்றும் கன்டெய்னர் லாரியில் தப்பி செல்ல முயன்றபோது சைபராபாத் போலீஸ் உதவியுடன் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து கொள்ளையர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரூப் சிங் பாகல் (வயது 22), சங்கர் சிங் பாகல் (36), பவன் குமார் விஸ்வகர்மா (22), ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தை சேர்ந்த பூபேந்தர் மஞ்சி (24), விவேக் மண்டல் (32), உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த டேக் ராம் (55), ராஜீவ் குமார் (35) என தெரியவந்தது.

இவர்களில் ரூப்சிங் பாகல் கல்லூரி மாணவர் ஆவார். சங்கர் சிங் பாகல் விவசாயி. பவன் குமார் விஸ்வகர்மா டிரைவர். பூபேந்தர் மஞ்சி தனியார் நிறுவன ஊழியர். விவேக் மண்டல் கடை வைத்துள்ளார். டேக் ராம் கன்டெய்னர் லாரி டிரைவர். ராஜீவ் குமார் கன்டெய்னர் லாரி கிளீனர் ஆவார்கள். இவர்களிடம் இருந்து 25 கிலோ தங்க நகைகள், 7 துப்பாக்கிகள், 97 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கன்டெய்னர் லாரி, ஒரு டாடா சுமோ கார், 13 செல்போன்கள், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் என்கிற விவேக் சுக்லா என்பவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைதான கொள்ளையர்களை ஓசூர் கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நகை கொள்ளை சம்பவம் நடந்த 18 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நகை கொள்ளையர்கள் பிடிபட்டது பற்றி தெலுங்கானா மாநிலம் சைபராபாத் மாநகர போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு மாநிலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த நகைகளுடன் கொள்ளையர்கள் தெலுங்கானா மாநிலம் வழியாக வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். நகைகள் இருந்த பைகளில் ஜி.பி.எஸ். கருவி இருந்தது. கொள்ளையர்கள் அதை பிரிக்காமல் எடுத்து வந்தனர். அதன் மூலம் கொள்ளையர்கள் வரும் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்துள்ளோம்.

கைதாகி உள்ள குற்றவாளிகள் அனைவரின் மீதும் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. பெங்களூருவில் தங்கி இருந்து எந்த பகுதிகளில் எல்லாம் கொள்ளையடிக்கலாம் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் தங்களின் கூட்டாளிகளுடன் பெங்களூருவில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அங்கு கொள்ளையடிக்க முடியாததால் ஓசூர் வந்து நிதி நிறுவனத்தில் நகைகளை கொள்ளையடித்து பின்னர் ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தமிழக போலீசார் உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் குற்றவாளிகள் அனைவரும் பிடிபட்டு, நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. தமிழக-தெலுங்கானா மாநில போலீசாரின் கூட்டு முயற்சியால் கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.