‘தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் தமிழன்தான்’ - ராகுல்காந்தி பேச்சு


‘தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் தமிழன்தான்’ - ராகுல்காந்தி பேச்சு
x
தினத்தந்தி 25 Jan 2021 12:30 AM GMT (Updated: 24 Jan 2021 11:28 PM GMT)

தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் தமிழன்தான் என்று ராகுல் காந்தி பேசினார்.

திருப்பூர்,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நேற்று 2-வது நாளாக திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, காங்கேயத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் உங்களுக்கு அறிவுரை சொல்வதற்காக இங்கு வரவில்லை. உங்களை சந்தித்து உங்களுடைய குறைகளை தெரிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்காக என்னை நான் அர்ப்பணிக்க வந்துள்ளேன். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தில் இருக்கிறவர்கள் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மொழிக்கு இருக்கும் பெருமையும், பண்பாட்டின் சிறப்பையும் அவர்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

நான் தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர, நானும் ஒரு தமிழன் தான். மோடி தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து விட்டு அவர் வெற்றிகரமாக செல்ல முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நான் உங்கள் வீட்டு பிள்ளை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் அதிகமாக இருக்கிறது. வாய்ப்பு வசதிகள் அதிகம் உள்ளது. ஆனால் தமிழக மக்களாகிய நீங்கள் இன்னும் வாழ்க்கையில் வளம் பெறாமல் இருக்கிறீர்கள் என்பதை பார்க்கும்போது எனக்கு வருத்தமாக உள்ளது.

தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் எதிர்காலத்தில் வாழ்க்கை வளமாக வேண்டும் என்பதற்காக நானும், காங்கிரஸ் கட்சியும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தை ஆளுகின்ற மோசமான ஆட்சியை மோடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி கிடைத்தால் நல்ல பல காரியங்கள் கிடைக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தும் அளவுக்கு கேவலமான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரதமர் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசை போலி முகமூடிக்கு பின்னால் வழிநடத்திக்கொண்டிருக்கிறார். தமிழக மக்களின் கலாசாரத்தையும், பண்பையும் அறியாதவர் மோடி.

தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் யாரும் ஏமாற்ற முடியாது. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். நாட்டிலேயே ஒரே கொள்கை இருக்க வேண்டும் என்கிறாா் பிரதமர். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டிய இந்தியா ஏன் ஒரே கொள்கையுடன் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட இந்திய மொழிகளுடன் இருக்க வேண்டும். தமிழக இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. உங்களுடைய சிப்பாயாக, உங்களுடைய உழைப்பாளியாக டெல்லியில் எனது குரல் ஒலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கருமாரம்பாளையத்தில் ராகுல் காந்திக்கு பெண் ஒருவர் ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்து வரவேற்றார். அங்கிருந்தவர்களுக்கு கைகுலுக்கியதோடு ஒரு குழந்தையை ராகுல் காந்தி கொஞ்சி மகிழந்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் நடந்த நெசவாளர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சயிலும் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்ப்பதில்லை. அவர்களை சாதாரண தொழிலாளர்களாக பார்க்கிறார்கள். நாட்டின் வரலாற்றில் அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்துபவர்கள் நீங்கள்தான். உங்கள் உறுதியான வளர்ச்சிதான் நாட்டையும் வளர்ச்சி அடைய செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் நெசவாளர்களுடன் அமர்ந்து அவர் மதிய உணவு சாப்பிட்டார்.

Next Story