ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையம்: வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார்


ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையம்: வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 25 Jan 2021 3:19 AM GMT (Updated: 25 Jan 2021 3:19 AM GMT)

ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையத்தை வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

சென்னை,

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தார்.

சட்டசபையிலும் இதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக ரூ.68 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகையையும் அரசு கோர்ட்டில் செலுத்தியது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றமும், நினைவில்லம் அமைக்க அனுமதி வழங்கியது. இதனையடுத்து நினைவில்லமாக மாற்றி அதை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில்,  சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை வருகிற 28-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். ஜனவரி 28 ஆம் தேதி காலை நடைபெறும் திறப்பு விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

முன்னதாக வேதா இல்லத்தில் ஜெயலலிதா படித்த புத்தங்கள், பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு இடம்பெறும் என்றும், நினைவு இல்லம் திறக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  


Next Story