சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின கொண்டாட்டம்: தமிழக அரசு விருதுகள்


சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின கொண்டாட்டம்: தமிழக அரசு விருதுகள்
x
தினத்தந்தி 26 Jan 2021 4:01 AM GMT (Updated: 26 Jan 2021 4:01 AM GMT)

சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின விழாவினையொட்டி, சாதனையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.

சென்னை, 

72வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் தேசியக்கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதையடுத்து அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தேசியக் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இதனைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் வீரதீர செயல்களை புரிந்த 3 பேருக்கு அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். இதன்படி தமிழக அரசின் வீரதீர செயலுக்கான 'அண்ணா பதக்கம்' கால்நடை மருத்துவர் பிரகாசுக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் வீரதீர செயலுக்கான 'அண்ணா பதக்கம்' ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஆசிரியை முல்லைக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் வீரதீர செயலுக்கான 'அண்ணா பதக்கம்' மதுரையைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்' கோவையைச் சேர்ந்த அப்துல் ஜப்பாருக்கு வழங்கப்பட்டது. நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது அளிக்கப்பட்டது. முதல் முறையாக இந்த விருதானது, நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கான 'காந்தியடிகள் காவலர் பதக்கம்' வழங்கப்பட்டது. பெண் ஆய்வாளர் மகுடீஸ்வரி, உதவி ஆய்வாளர் செல்வராஜ், தலைமைக் காவலர்கள் சண்முகநாதன், ராஜசேகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான கோப்பை வழங்கப்பட்டது. முதலிடம் - சேலம் நகர காவல்நிலையம், இரண்டாமிடம் - திருவண்ணாமலை நகர காவல்நிலையம், மூன்றாமிடம் - கோட்டூர்புரம் காவல்நிலையம்

இதனைத்தொடர்ந்து தமிழக காவல்துறையின் வியக்க வைக்கும் வீர சாகசங்கள் நிகழ்த்தி காட்டப்பட்டன. கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, பள்ளி-கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஆனால் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முப்படையின் வீரத்தை பறைசாற்றும் அணிவகுப்புகள், அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்புகள் போன்றவையும் விழாவில் இடம்பெற்றன.


Next Story