கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்து விட்டார் பிரதமர் மோடி: கருணாஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்து விட்டார் பிரதமர் மோடி:  கருணாஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Jan 2021 1:35 PM GMT (Updated: 26 Jan 2021 1:35 PM GMT)

கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க பிரதமர் மோடி துணிந்து விட்டார் என கருணாஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

சென்னை,

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

இதற்கு டெல்லி போலீசார் முதலில் அனுமதி மறுத்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை விவசாயிகளின் ஒரு தரப்பினர் ஏற்று கொண்டாலும், மற்றொரு தரப்பினர் தடுப்புகளை உடைத்து கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்றனர்.

விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி, இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். மேலும் விவசாயிகள் ஆயுதங்களை சுழற்றியும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.  விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர்.

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.  விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.  இதனால், அந்த பகுதியில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவியுள்ளனர் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், டெல்லி பேரணியில் உயிரிழப்பு சம்பவம் பற்றி குறிப்பிட்டு பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ., கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க பிரதமர் மோடி துணிந்து விட்டார் என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

Next Story