மாநில செய்திகள்

ரிப்பன் வெட்டி ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் பழனிசாமி + "||" + Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy unveils former Chief Minister J Jayalalithaa's memorial at Marina Beach

ரிப்பன் வெட்டி ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் பழனிசாமி

ரிப்பன் வெட்டி ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் பழனிசாமி
சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.

இந்தநிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதனை தொடர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த  முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். 

ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரமும், 30.5 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும் கொண்ட மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை அமைப்பு கட்டப்பட்டுள்ளது.

நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது. அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் ஊக்க உரைகள், உற்சாகமூட்டும் வார்த்தைகள், சிறுகதைகள், படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அரசியல் தலைவர் ஒருவருக்கான நினைவிடத்தில் டிஜிட்டல் முறையில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்காரப் பூச்செடிகளால் தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவிடத்தைச் சுற்றியுள்ள 9 ஏக்கர் பரப்பளவிலான இடங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு நினைவிடத்தைப் பராமரிக்க பொதுப்பணித்துறைக்கு அரசு ரூ.9 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.