அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகள் எதிர்பார்க்கிறோம் - பிரேமலதா விஜயகாந்த்


அதிமுக கூட்டணியில்  41 தொகுதிகள் எதிர்பார்க்கிறோம் - பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 27 Jan 2021 4:36 PM GMT (Updated: 27 Jan 2021 4:36 PM GMT)

அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே 41 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதை நாங்கள் தற்போதும் எதிர்பார்க்கிறோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் தேமுதிக பிரமுகர்களின் இல்லப் புதுமனை புகுவிழா, காதணி விழா, மருத்துவமனை திறப்பு விழா, கட்சி அலுவலகத் திறப்பு விழா  என  நடைபெற்றது. இதில் தேமுதிக  பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த்  கூறியதாவது:-

தமிழகத்தில் மாவட்டம் தோறும் எங்கள் கட்சியை பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 2006-ம் ஆண்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொடுத்த தேர்தல் அறிக்கைதான் முதலிடத்தில் உள்ளது. அவரது அறிக்கைகள் இன்று இந்தியாவின் பல மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகம் செய்துள்ள, வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொண்டுசெல்லும் திட்டம் கூட விஜயகாந்த் அறிவித்த தேர்தல் அறிக்கையில் இருந்தது தான். லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சி என கெஜ்ரிவால் கூறி வருவதும் விஜயகாந்த் அறிவித்ததுதான். இதுபோல, நிறைய திட்டங்கள் தேமுதிக வசம் உள்ளன.

கமலஹாசன் அறிவித்தது போலவே அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். அவருக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு, கிடைக்கும் வாக்குகள் பற்றி தேர்தல் முடிவில்தான் தெரியவரும். அதிமுக கூட்டணியில் நாங்கள் உள்ளோம். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான தொகுதிப் பங்கீடு போன்ற பேச்சுவார்த்தையை கட்சிகள் தொடங்கி முடிக்க வேண்டும். தேர்தலுக்கான கால அவகாசம் குறைவாகவே உள்ளது.

தாமதிக்காமல் முடிவெடுத்து மக்களைச் சந்தித்து வெற்றியை மிகப் பிரகாசமாக்க வேண்டும். திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துவது அவர்களது கட்சி நிலைப்பாடு. மக்களிடம் பெறும் மனுக்கள் மீது 100 நாளில் நடவடிக்கை என்று கூறுகிறார் ஸ்டாலின். ஏற்கெனவே தமிழகத்தில் 5 முறை திமுக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள். கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று விட்டனர். ஆனால், திமுக அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றினார்களா?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது இறுதிச் சுற்று பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்பார். அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே 41 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதை நாங்கள் தற்போதும் எதிர்பார்க்கிறோம் என  பிரேமலதா கூறினார்.

Next Story