பிப்ரவரி 28-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தியேட்டர்களில் கூடுதல் ரசிகர்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


பிப்ரவரி 28-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தியேட்டர்களில் கூடுதல் ரசிகர்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
x
தினத்தந்தி 27 Jan 2021 8:23 PM GMT (Updated: 27 Jan 2021 8:23 PM GMT)

சினிமா தியேட்டர்களில் அதிக பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இதில் மாதந்தோறும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் கொரோனா ஊரடங்கை அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது. அதேநேரம் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த தளர்வுகளில் முக்கியமாக, சினிமா தியேட்டர்களில் கூடுதல் பார்வையாளர்களை அனுமதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. தற்போது தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல மதம், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசாரம், சமூக கூட்டங்களில் மூடப்பட்ட அரங்குகளில் 50 சதவீத ஆட்கள் அல்லது அதிகபட்சமாக 200 பேர் வரை அனுமதிக்க தற்போது வழிவகை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்யலாம்.

பொது நீச்சல் குளங்களில் தற்போது விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இனிமேல் அனைவரும் பொது நீச்சல் குளங்களை பயன்படுத்த முடியும்.

மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இதற்காக தனியாக அனுமதியோ, ஒப்புதலோ, இ-பாசோ தேவையில்லை.

விற்பனைக்கான கண்காட்சி அரங்குகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இனி அனைத்து விதமான கண்காட்சி அரங்குகளையும் திறக்கலாம்.

சர்வதேச விமான பயணங்களை தொடங்கும் விவகாரத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்.

பயணிகள் ரெயில், விமான போக்குவரத்து, மெட்ரோ ரெயில், பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவு விடுதிகள், வணிக வளாகங்களின் செயல்பாட்டுக்கு நேரத்துக்கு தகுந்தவாறு முடிவு செய்ய முடியும்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் அரசின் விதிமுறைகளின்படி மாவட்ட நிர்வாகங்கள் தகுந்த நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டும். மேலும் மக்கள் முக கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

Next Story