மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று தெப்பத்திருவிழா: மின்னொளியில் மின்னும் தெப்பக்குளம்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று தெப்பத்திருவிழா: மின்னொளியில் மின்னும் தெப்பக்குளம்
x
தினத்தந்தி 27 Jan 2021 10:24 PM GMT (Updated: 27 Jan 2021 10:24 PM GMT)

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று தெப்ப திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

மதுரை,

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது சிறப்பு. அதில் முக்கிய திருவிழாவாக சித்திரை திருவிழா, ஆடி முளைக்கொட்டு, ஆவணி மூலஉற்சவம், ஐப்பசி திருவிழா, தை தெப்ப திருவிழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான தை மாத தெப்பத்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

 விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பல்வேறு பகுதியில் உள்ள மண்டபங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கி்ன்றனர். 8-ம் நாள் விழாவில் வலைவீசி அருளிய லீலைக்காக டி.பி.மெயின் ரோட்டில் உள்ள மண்டபத்திலும். 9-ம் நாளான நேற்று முன்தினம் சப்தாவர்ண சப்பரத்தில் 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்தனர்.

விழாவில் 11-ம் நாளான நேற்று (புதன்கிழமை) கதிரறுப்பு வைபவம் சிந்தாமணியில் நடைபெற்றது. அறுவடைசெய்த நெற்பயிருடன் சுந்தரேஸ்வர்-பிரியாவிடை, மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா இன்று (வியாழக்கிழமை) வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இதையொட்டி தெப்பக்குளம் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் தெப்பக்குளம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலும் மின்னொளியில் மின்னுகிறது. 

மேலும் தெப்பக்குளம் முழுவதும் நீர் நிரப்பப்பட்டு தேர் படகு போல் மிதந்து செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வர சுவாமியும் இன்று காலை ஒரு முறையும் இரவு ஒரு முறையும் தெப்பக்குளத்தில் தேரில் உலா வந்து  பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு தெப்பக்குளத்தில் அதிகமான அளவு தண்ணீர் நிரம்பி அழகுற காட்சி அளிக்கிறது. மேலும் பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் சாமியும், அம்மனும் தெப்பத்தில் வலம் வரும் காட்சி மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே தெப்பத்திருவிழாவை காண பக்தர்கள் ஆவலோடு உள்ளனர்.

Next Story