தைப்பூச திருவிழா: மருதமலை முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் + "||" + Thaipusam Festival: Tirukkalyanam today at Marudhamalai Murugan Temple - Devotees are not allowed
தைப்பூச திருவிழா: மருதமலை முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்
தைப்பூச திருவிழாவையொட்டி மருதமலை முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
வடவள்ளி,
கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முருக பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. மருதமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தைப்பூச திருவிழா நடைபெற திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 22-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. பின்னர் தினந்தோறும் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று தைப்பூசத்தையொட்டி சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இந்த நிலையில் பாதயாத்திரை வரும் பக்தர்கள், பால்குடம் பால்காவடி எடுத்து வரும் பக்தர்கள் கோவிலுக்குள் நேற்று அனுமதிக்கப்படவில்லை.இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 3 மணி முதல் 5.30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சிறிய தேரில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வருகின்றார்.
இதுகுறித்து கோவில் உதவி ஆணையாளர் (பொறுப்பு) விமலா கூறுகையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மருதமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.நிகழ்ச்சி முடிந்தவுடன் பக்தர்கள் காலை 7 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்யலாம். மலைக்கோவிலுக்கு கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று கூறினார்.
பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை ஆகம விதிகளின்படி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் பக்தர்கள் மனு கொடுத்தனர்.