ஐகோர்ட்டு விதித்த கட்டுப்பாடுகளுடன் ஜெயலலிதா நினைவு இல்லம் திறப்பு - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு


ஐகோர்ட்டு விதித்த கட்டுப்பாடுகளுடன் ஜெயலலிதா நினைவு இல்லம் திறப்பு - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Jan 2021 9:43 PM GMT (Updated: 28 Jan 2021 9:43 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு விதித்த கட்டுப்பாடுகளுடன் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நேற்று நினைவு இல்லமாக திறக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில்தான் வாழ்ந்து மறைந்தார். அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு பணிகள் விரைவாக நடைபெற்றன. இந்த நிலையில், நேற்று காலை ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாக திறக்கப்பட்டது. இந்த விழாவுக்கு சென்னை ஐகோர்ட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்ததால், எளிமையான முறையிலேயே திறப்பு விழா நடந்தது. விழா நடைபெற்ற வேதா நிலைய வளாகத்திற்குள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ப.தனபால் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

சரியாக, காலை 10.45 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேதா நிலைய வாயிலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ப.தனபால், மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.

அதன்பின்னர், நினைவு இல்ல சுவரில் இடதுபுறமாக அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிமோட் கன்ட்ரோல் மூலம் திறந்துவைத்தார். அதே நேரத்தில், வீட்டின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையும் திறக்கப்பட்டது. தொடர்ந்து, நினைவு இல்லமாக மாற்றப்பட்ட வீட்டு வாசலின் முகப்பில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை வெட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

பின்னர், வீட்டினுள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ப.தனபால் மற்றும் மூத்த அமைச்சர்கள் மட்டும் சென்றனர். அங்குள்ள குத்துவிளக்கை ஏற்றிய அவர்கள், நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டனர். சற்று நேரத்தில் அவர்கள் வெளியே வந்தனர். காலை 10.45 மணிக்கு தொடங்கிய விழா 11 மணிக்கு முடிவடைந்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

விழாவில், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் க.சண்முகம், பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, விழா முடிந்ததும் வேதா நிலைய கதவுகள் பூட்டப்பட்டு வீட்டின் சாவி மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமியிடம் வழங்கப்பட்டது.

அதைப் பெற்றுக்கொண்ட அவர் ஐகோர்ட்டு உத்தரவுப்படி, ஐகோர்ட்டு பதிவாளர் சி.குமரப்பனிடம் சாவியை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதால் சாவி ஒப்படைக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக நேற்று திறக்கப்பட்டாலும், பொதுமக்கள் யாரும் உள்ளே பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. ஆர்வத்துடன் வந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பலர் போலீஸ் தடைகளை மீறி வேதா நிலையம் முன்பு வந்து, தங்களது செல்போன்களில் செல்பி புகைப்படம் எடுத்து ஆறுதல் அடைந்து கொண்டனர்.

Next Story