"ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2021 11:59 AM GMT (Updated: 1 Feb 2021 11:59 AM GMT)

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கி ஆணையிட்டவுடன், இயதியாவிலேயே முதல் மாநிலமாக, தமிழ்நாட்டிலும் ஊதியக்குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளை உரிய காலத்திலேயே பெற்று, ஒரே மாதத்தில் அதனை பரிசீலித்து, மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வையும் வழங்கி ஆணையிட்டது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு என்றுமே புறந்தள்ளியது இல்லை. மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியை அவ்வப்போது சந்தித்து வந்த போதிலும், மக்களுக்கான பணியை அரசு ஊழியர்கள் ஊக்கமுடன் செய்ய வேண்டுமென கருதிதான், அவ்வப்போது ஊதிய உயர்வு, அகவிலைப்படி போன்றவற்றை உடனுக்குடன் வழங்கி வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் கூட சில மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தது / நிறுத்தி வைத்தது. ஆனால், தமிழ்நாடு அரசு அந்த கடுமையான நிதி நெருக்கடியிலும் எந்த அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்தையோ, அகவிலைப்படியையோ குறைக்கவில்லை.

எந்த தாமதமும் இன்றி வழங்கியது. இயத முந்ற்சிகள் எல்லாம், அரசு ஊழியர்கள் கட்டுப்பாட்டோடு செயல்படுவது மக்களின் நலனுக்கு அவசியம் என்பதாலும், அத்தகைய அரசு ஊழியர்கள் தங்கள் பணியை ஊக்கமுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதால்தான். இந்நிலையில், அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது போன்றவை நிர்வாக கட்டுப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பதுடன், மக்கள் பணிக்கும் பாதகம் ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்துதான், இத்தகைய போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அரசு கோரி வருகிறது.

எனினும், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்கள், ஏழாவது ஊதியக்குழுவின் பரியதுரையின்படி புதிய ஊதியத்திற்குரிய 21 மாதகால நிலுவைத் தொகை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும், பணியாளர் பகுப்பாய்வு குழுவினை அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து வந்தனர். அவற்றுள், சில பணியாளர் சங்கங்கள் ஒன்றிணையது, அத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், மக்களின் நலனுக்காக பணியாற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், நிர்வாக கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக, 7,898 அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர, சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17,686 ஆசியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 408 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், அவர்கள் அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதே போன்று, 2,338 நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மீளப் பணியமர்த்தப்பட்டனர். மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, அப்போராட்டத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின் போது, போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடையது, நீதிமன்றத்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் தங்களுடைய போராட்டங்களை உடனடியாக கைவிட்டு, மக்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென 29.1.2019 அன்று நான் அன்புடன் கேட்டுக் கொண்டேன். இதனையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொள்வதாக 30.1.2019 அன்று அறிவித்து, உடனடியாக பணிக்கு திரும்பினர்.

அரசால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளையும், வழக்குகளையும் திரும்ப பெற, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஏற்கனவே என்னிடம் நேரில் கோரிக்கை வைத்திருந்தனர். இன்று (1.2.2021), தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள், மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து, மேற்கூறிய தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

அமைச்சரும், இது குறித்து எனது கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக அச்சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்கள். இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, மறப்போம், மன்னிப்போம் என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுகிறது.

அரசு எடுத்துள்ள இந்த நல்ல முடிவை ஏற்று, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், மேலும் ஊக்கமுடனும், ஆக்கமுடனும் சிறப்பாக மக்கள் பணி மற்றும் கல்விப்பணியை தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story