தமிழக சட்டசபையில் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், டாக்டர் சாந்தா மறைவுக்கு இரங்கல் - தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் ஒத்திவைப்பு


தமிழக சட்டசபையில் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், டாக்டர் சாந்தா மறைவுக்கு இரங்கல் - தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 3 Feb 2021 8:10 PM GMT (Updated: 3 Feb 2021 8:10 PM GMT)

அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், டாக்டர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்தநிலையில் தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணியளவில் கூடியது. கூட்டம் தொடங்கியவுடன், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வீ.சந்திரன், சு.சிவராஜ், மா.மீனாட்சிசுந்தரம், ஜி.பி. வெங்கிடு, இரா.அரிக்குமார், கே.சி.கருணாகரன், பா.மனோகரன், பி.வெற்றிவேல், லி.அய்யலுசாமி, பி.முகமது இஸ்மாயில், வி.தண்டாயுதபாணி, எஸ்.அக்னி ராஜூ, சொ.ந.பழனிசாமி, வி.சிவகாமி, ஏ.டி.செல்லச்சாமி, எஸ்.ஆர்.ராதா (முன்னாள் அமைச்சர்), எஸ்.மணி, கே.ஏ.மணி, டி.யசோதா, ப.வெ.தாமோதிரன் (முன்னாள் அமைச்சர்), இரா.சண்முகம், மு.பழனிவேலன் ஆகிய 22 பேருக்கு சபாநாயகர் ப.தனபால் இரங்கல் குறிப்புகள் வாசித்தார். அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் சட்டசபை சார்பில் தெரிவித்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து அனைவரும் சில மணித்துளிகள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

கடந்த அக்டோபர் மாதம் 31-ந்தேதி மரணமடைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, கடந்த செப்டம்பர் 25-ந்தேதி மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த மாதம் 19-ந்தேதி மரணமடைந்த டாக்டர் சாந்தா ஆகிய 3 பேரின் மறைவுக்கு சபாநாயகர் ப.தனபால் இரங்கல் தீர்மானங்களை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர், ‘அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு எளிமையானவர். கட்சி பாகுபாடின்றி அனைவரின் அன்பையும், பாராட்டையும் பெற்றவர். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தன் இனிமையான குரல்வளத்தால் 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ‘கின்னஸ்’ சாதனை படைத்திருக்கிறார். டாக்டர் சாந்தா, ஏழை-எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்’ என்று புகழஞ்சலி செலுத்தினார். பின்னர் மறைந்த 3 பேருக்கும் அனைவரும் சில மணித்துளிகள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டசபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 10.14 மணியளவில் முடிவடைந்தது.

இன்று காலை 10 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத்தில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

Next Story