சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு


சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 8 Feb 2021 3:10 AM GMT (Updated: 8 Feb 2021 3:10 AM GMT)

சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை,

சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் உள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து விட்டு, விடுதலையான சசிகலா, கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் அதில் குணமடைந்த அவர் பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்தார்.

இந்தநிலையில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார். பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்ட சசிகலாவிற்கு அ.ம.மு.க. கட்சி சார்பில் ஆரத்தி எடுத்தனர்.

பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்ட சசிகலாவின் காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.
அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் இருந்து காரில் சென்னை வரும் அவருக்கு வழி நெடுக வரவேற்பு கொடுக்க அ.ம.மு.க. கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகர எல்லைப்பகுதியான பூந்தமல்லியில் இருந்து, சசிகலா தங்கப்போகும் தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் வீடு வரை சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. முக்கியமான 17 சாலை சந்திப்புகளில் அ.ம.மு.க. தொண்டர்களை கூட்டி வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், 32 இடங்களில் தொண்டர்கள் கூட்டமாக இருந்து சசிகலாவுக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா தியாகராயநகருக்கு செல்லும் வழி பற்றிய தகவல் போலீசாருக்கு அ.ம.மு.க. கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சசிகலா அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் செல்வார் என்ற தகவல் இல்லை. இருந்தாலும் திடீரென்று அந்த 2 இடங்களுக்கும் சசிகலா சென்றால், அதை தடுத்து நிறுத்த அந்த 2 பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்காமலும் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story