அதிமுகவில் இருந்து 7 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் - தலைமை அறிவிப்பு


அதிமுகவில் இருந்து 7 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் - தலைமை அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Feb 2021 4:02 PM GMT (Updated: 8 Feb 2021 4:02 PM GMT)

அதிமுகவில் இருந்து 7 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

சென்னை, 

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா இன்று காலை பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை நோக்கிப் புறப்பட்டார். பெங்களுர் நகரில் இருந்து புறப்பட்ட சசிகலா, காலை 10.15 மணிக்குத் தமிழக எல்லை வந்து சேர்ந்தார்.

சசிகலா தமிழக எல்லைக்கு வந்ததும் காரில் இருந்த சசிகலாவிடம், கிருஷ்ணகிரி மாவட்ட ஏடிஎஸ்பி சக்திவேல் நோட்டீஸ் வழங்கினார். நோட்டீஸில் காரில் உள்ள அதிமுக கொடி அகற்றப்பட வேண்டும். சசிகலா காருக்குப் பின்னால் 5 கார்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. காரில் உள்ள கொடியை அகற்றச் சிறிது நேரம் அவகாசம் அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் கொடியை அகற்றாமல் தமிழ்நாட்டுக்குள் செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் உறுதியாகக் கூறப்பட்டது. இதனால் சசிகலா உடனடியாக சூளகிரி அதிமுக ஒன்றியச் செயலாளரும், எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளருமான சம்பங்கியின் காரில் அமர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார். 

இந்நிலையில் அதிமுகவில் இருந்து 7 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

இதன்படி சசிகலாவுக்கு அதிமுக கொடியுடன் கூடிய காரை கொடுத்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் சம்பங்கி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக திருவள்ளூர் கிழக்க மாவட்டக் கழக துணைச் செயலாளர் டி.தட்சணாமூர்த்தியும், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளர் சந்திரசேகர ரெட்டி என்ற போகி ரெட்டி, ஒன்றிய கழக மாவட்டப் பிரதிநிதி ஜானகி ரவீந்திர ரெட்டி, கொம்மேப்பள்ளி ஊராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் பிரசாந்த் குமார், ஒன்றிய இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறைத் தலைவர் நாகராஜ், சிங்கிரிப்பள்ளி, சூளகிரி மேற்கு ஒன்றியம் ஆனந்த் ஆகியோர் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

Next Story