தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சிறு, குறு வியாபாரிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் - கனிமொழி எம்.பி.


தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சிறு, குறு வியாபாரிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் - கனிமொழி எம்.பி.
x
தினத்தந்தி 9 Feb 2021 12:31 AM GMT (Updated: 9 Feb 2021 12:31 AM GMT)

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சிறு, குறு வியாபாரிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

பிரசார பயணம்
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரசார பயணத்தை தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி மேற்கொண்டு வருகிறார். மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஜீவாநகரில் நேற்று காலை அவர் பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது மகளிர் சுய உதவிக்குழுவினர், அனைத்து சமுதாய நிர்வாகிகள், அப்பள தொழிற்சாலை தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார். வியாபாரிகளின் பிரச்சினைகளை அரசு காது கொடுத்து கேட்கவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் சிறு, குறு வியாபாரிகள், தொழில்முனைவோரின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
மறுபடியும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையை தளபதி ஸ்டாலின் உருவாக்கி தருவார். இந்த உறுதியை நான் உங்களுக்கு வழங்குகிறேன். கருணாநிதி ஆட்சியில் எப்படி பொருளாதார வளர்ச்சி இருந்ததோ, அதுபோல், தொழில் செய்பவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கும். சுய உதவிக்குழுவினர் தமிழகத்தில் சுயமாக பணியாற்றும் நிலை தமிழகத்தில் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் ஜீவாநகரில் நடந்து சென்று, சிறு, குறு வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த டி.வி.எஸ்.நகர் மேம்பாலத்தை பார்வையிட்டார். இந்த பாலம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சியில் பாதியில் நின்று விட்டது. மக்களின் பயன்பாட்டுக்கான பாலத்தை முழுமையாக கட்ட முடியாத அரசு, புதிய தொழில் முதலீட்டுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு ஏற்படுத்தித்தர முடியும் என கேள்வியெழுப்பினார். 

பின்னர் மாடக்குளம் கண்மாயை பார்வையிட்ட அவர், நீர்நிலைகளை தூர்வாருகிறோம் என்ற பெயரில் பொதுமக்களின் பணத்தை வீணாக்கி வருகின்றனர். ஆனால், முழுமையாக எந்த நீர்நிலையையும் தூர்வாரப்படவில்லை. மதுரை மேற்கு தொகுதியை சிட்னி நகரமாக மாற்றுவேன் என அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தார். வைகை ஆற்றை கூட சுத்தப்படுத்தவில்லை. அவர் அமைச்சர் வேலையை பார்ப்பதற்கு பதிலாக விஞ்ஞானியாக பணியாற்ற விரும்புகிறார். என்ன திட்டங்களை கொண்டு வந்தார் என தெரிவித்தால் மகிழ்ச்சியுடன் பார்வையிடுவேன். என்றார்.
பின்னர் பரவையில் நடந்த கிராமசபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மதுரை சிம்மக்கல்லில் கருணாநிதி சிலை நிறுவப்பட உள்ள இடத்தை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். அப்போது கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்ற அவர், ஒரு நிர்வாகி பரிசாக வேல் அளிக்க முன் வந்தபோது, கை சைகை மூலம் அதனை வேண்டாம் என தெரிவித்தார்.

பொதுக்கூட்டம்
இதைத் தொடர்ந்து ஜீவா நகர் பகுதியில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கனிமொழி எம்.பி. பேசுகையில்,பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்ததன் விளைவாக தமிழகம் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி வருவதை உணர முடிகிறது. சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியவருக்கு பரிசாக முதல்-அமைச்சர் சார்பில் வழங்கப்பட்ட தங்கக்காசு, போலியானது என்பது மறுநாளே தெரியவந்துள்ளது. இந்த ஆட்சியை போலவே அந்த பரிசும் தங்கம் இல்லை தகரம் என்பது தெரிந்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டங்களையும் மதுரையில் செயல்படுத்தவில்லை. தல்லாகுளம் முதல் அரசரடி வரை பறக்கும் பாலம் அமைக்கும் திட்டத்தை அ.தி.மு.க. அறிவித்து ரூ.700 கோடியை ஒதுக்கியதாக கூறியது. எந்த திட்டமாக இருந்தாலும் அறிவிப்புடன் நின்று விடுகிறது இந்த ஆட்சியில். விரைவில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும். தமிழகத்திற்கு நல்ல எதிர்காலம் பிறக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story