வேலூர் அருகே விபத்து ஏற்படுத்திய காரில் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் போலீஸ் தீவிர விசாரணை


வேலூர் அருகே விபத்து ஏற்படுத்திய காரில் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் போலீஸ் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 9 Feb 2021 8:30 PM GMT (Updated: 9 Feb 2021 7:13 PM GMT)

வேலூர் அருகே மாணவர்கள் மீது மோதிய காரை பொதுமக்கள் விரட்டிச்சென்றபோது டயர்வெடித்து மரத்தின்மீது மோதி நின்றது. இந்த காரில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர், 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் வீ.கோட்டா ரோடு சந்திப்பு சாலையில் ஒரு கார் வேகமாக சென்றது. அந்த கார் இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி தெருவில் சென்றபோது அங்குள்ள பள்ளி அருகில் பஞ்சர் கடையில் சைக்கிளுக்கு பஞ்சர் போட்டுக்கொண்டிருந்த ரகமதாபாத் பகுதியை சேர்ந்த வசீம் (வயது 18) என்ற வாலிபர் மீது மோதியது.

பின்னர் கார் நிற்காமல் அதே வேகத்தில் சென்றது. அப்போது 4 கம்பம் தெருவில் பள்ளி முடிந்து சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் மீதும் அந்த கார் மோதியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் காரை துரத்தினர்.

டயர் வெடித்து நின்றது

5 கிலோமீட்டர் தூரம் சென்ற கார் மத்தூர் கிராமத்தில் சென்றபோது திடீரென டயர் வெடித்து அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் மோதி, பின்னர் அதேப்பகுதியில் உள்ள மரத்தில் மோதி நின்றது.

அதைத்தொடர்ந்து காரை விரட்டிச்சென்ற பொதுமக்கள் காரில் இருந்த நபரை பிடித்து தாக்கினர். அப்போது அவர் போதை மயக்கத்தில் இருந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பேரணாம்பட்டு போலீசார் விரைந்து சென்று அந்த நபரை மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள்

பின்னர் அவரை மேல்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் பேரணாம்பட்டு டவுன் லால் மசூதி தெருவை சேர்ந்த அப்துல்அஜீஸ் என்பவருடைய மகன் இம்ரான் அஜீஸ் (38) என்பது தெரிந்தது.

அவர் ஓட்டிச்சென்ற காரில் சோதனை நடத்தியபோது காரில் 2 துப்பாக்கிகள், ஒரு கத்தி, ஒரு வாள், 4 செல்போன்கள், வெடிகுண்டு போன்ற ஒரு பொருள், விதவிதமான நம்பர் பிளேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பி.டி.வி.9 என்ற பெயரில், வேலூர் பத்திரிகையாளருக்கான அடையாள அட்டையும் இருந்தது.

கும்பலுடன் தொடர்பா?

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் விரைந்து சென்று பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினார். கார், துப்பாக்கிகள், கத்தி, வாள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

துப்பாக்கி, கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இம்ரான் அஜீஸ் பிடிபட்டதால் அவருக்கு, வேறு கும்பலுடன் ஏதும் தொடர்பு உள்ளதா?, எதற்காக ஆயுதங்களுடன் திரிந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நாளில் காரில் துப்பாக்கி, ஆயுதங்கள் பிடிபட்ட சம்பவம் பேரணாம்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story