பிப்ரவரி 15க்குப் பிறகு தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு வெளியாகலாம்


பிப்ரவரி 15க்குப் பிறகு தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு வெளியாகலாம்
x
தினத்தந்தி 10 Feb 2021 11:18 AM GMT (Updated: 10 Feb 2021 1:00 PM GMT)

மேற்கு வங்ககாளம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறும் மாநிலத் தேர்தல்களை பிப்ரவரி 15 க்குப் பிறகு அறிவிக்க வாய்ப்புள்ளது.

சென்னை

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் வருகிற ஜூன் மாதத்துக்குள் முடிகிறது.

இதையடுத்து இந்த 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தேர்தலுக்காக புதிய வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு பயன்படுத்தும் முறை நடைமுறைபடுத்தப்பட உள்ளது.

இந்தநிலையில் சட்டசபை தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று காலை சென்னை வந்தார்.

அவருடன் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், கூடுதல் செயலாளர் ஷிபாலி சரண் ஆகியோரும் வந்துள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்தனர். அப்போது சட்டசபை பொதுதேர்தல் தொடர்பாக ஒவ்வொரு கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு அறிந்தனர்.

நாளை மாலை 5 மணிக்கு புதுச்சேரிக்கு செல்கிறார்.தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடங்கிய தேர்தல் ஆணையக் குழு, பிப்ரவரி 10-15 தேதிகளில் ஆறு நாட்கள் - தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் செய்கிறது.

அதன் பிறகு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லி சென்றதும் விரிவாக ஆலோசித்து தேர்தல் தேதியை முடிவு செய்கிறார். இதே போல் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி முடிவு செய்யப்படுகிறது.

பின்னர் அடுத்த மாதம் முதல் வாரம் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்க உள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் தென் மாநில  சுற்றுப்பயணம் பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் முடிவடைகிறது, அதன் பிறகு நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான வாக்கெடுப்பு அட்டவணை அறிவிக்கப்படும்.

தேர்தல் ஆணையத்தின் வட்டார தகவல்களின் படி ஐந்து மாநிலங்களுக்கான  தேர்தல் அட்டவணை  பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அறிவிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி  ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கலாம்.  

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் ஆறு முதல் எட்டு கட்டங்களாகவும்,  அதே நேரத்தில் அசாம் இரண்டு முதல் மூன்று கட்டங்களாக நடைபெறும் . இந்த அனைத்து மாநிலங்களிலும் ஒரே நாளில் வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான சிபிஎஸ்இ தேர்வு தொடங்கும் மே 1 க்கு முன்னர் அனைத்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை முடிக்க தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்து  உள்ளது.

Next Story