அமமுகவிற்கும், அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி


அமமுகவிற்கும், அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 10 Feb 2021 2:18 PM GMT (Updated: 10 Feb 2021 2:18 PM GMT)

அமமுகவிற்கும், அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம், 

அமமுகவிற்கும், அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “அதிமுகவில் எந்த பிளவையும், யாராலும் ஏற்படுத்த முடியாது. அதிமுகவிற்கு செல்லும் இடமெல்லாம், மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. அதிமுக கூட்டணியில் எந்த இழுபறியும் கிடையாது. 

சசிகலா, இளவரசி சொத்துகள், நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் அரசுடைமை ஆக்கப்பட்டது. ஜனநாயக நாட்டில் அடக்குமுறை என்ற கேள்விக்கு இடமில்லை. எள்முனை அளவுக்கு கூட அதிமுகவில் பிளவு இல்லை. ஒற்றுமையாகவே உள்ளோம். கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் நீக்கம் செய்யப்படுவது எல்லா கட்சியிலும் உள்ள நடைமுறைதான். அதிமுக வேறு, அமமுக வேறு, அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய விரும்பினால் அதிமுக தலைமை பரிசீலனை செய்யும்.

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்களைதான் நீக்கியுள்ளோம். அண்ணன்-தம்பி பிரச்சனை என்று கட்சிக்குள் பேசியது திரித்து வெளியாகி உள்ளது. அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நான் எதையும் சந்திக்க தயார். பாமக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை;  பேச்சுவார்த்தைக்கு பின் தொகுதிப்பங்கீடு பற்றி முடிவு செய்யப்படும். மத்தியில் கூட்டணியில் இருந்த போது, திமுக எந்த நன்மையும் செய்யவில்லை. கொரோனா காலத்திலும் அரசு ஊழியர்களுக்கு நிலுவை இல்லாமல் சம்பளம் வழங்கப்பட்டது” என்று கூறினார்.

Next Story