தமிழகத்தில் 8 லட்சத்து 27 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்


தமிழகத்தில் 8 லட்சத்து 27 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
x
தினத்தந்தி 10 Feb 2021 8:23 PM GMT (Updated: 10 Feb 2021 8:23 PM GMT)

தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 284 ஆண்கள், 194 பெண்கள், 3-ம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 149 பேரும், கோவையில் 62 பேரும், செங்கல்பட்டில் 36 பேரும், திருவள்ளூரில் 23 பேரும், திருப்பூரில் 19 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூரில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 31 ஆயிரத்து 42 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 209 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

5 பேர் உயிரிழப்பு

இங்கிலாந்து வந்த பயணி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த 8-ந்தேதியில் முதல் நேற்று வரை இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 1,764 பேரில் 1,494 பேர் கண்டறியப்பட்டு பரிசோதித்ததில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,461 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. மீதமுள்ள 26 பயணிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் என 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அந்தவகையில் சென்னையில் 2 பேரும், கோவை, மதுரை, திருச்சியில் தலா ஒருவர் என 4 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 12,396 பேர் உயிரிழந்துள்ளனர்.

493 பேர் பூரண குணம்

கொரோனா பாதிப்பில் இருந்து 493 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேரும், கோவையில் 55 பேரும், செங்கல்பட்டில் 31 பேரும், திருவள்ளூரில் 22 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 504 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.

தற்போது சிகிச்சையில்4 ஆயிரத்து 309 பேர் உள்ளனர். 

Next Story