9, 10, 11, 12-ம் வகுப்புகளை தொடர்ந்து 6, 7, 8-ம் வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் குறைப்பு கல்வித்துறை தகவல்


9, 10, 11, 12-ம் வகுப்புகளை தொடர்ந்து 6, 7, 8-ம் வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் குறைப்பு கல்வித்துறை தகவல்
x
தினத்தந்தி 10 Feb 2021 10:30 PM GMT (Updated: 10 Feb 2021 9:12 PM GMT)

9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளை தொடர்ந்து 6, 7, 8-ம் வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், நோய் தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின.

ஏற்கனவே கொரோனா தொற்றால் ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலம் முழு பாடங்களையும் நடத்தி முடிக்க முடியாத சூழலை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 30 முதல் 35 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, அதற்கான விவரங்களையும் தெரிவித்தது.

6, 7, 8-ம் வகுப்புகளுக்கு...

இதையடுத்து 9, 11-ம் வகுப்புகளுக்கும் 30 முதல் 40 சதவீதம் வரையில் பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பை வெளியிட்டதோடு, அவர்களுக்கான நேரடி வகுப்புகளும் கடந்த 8-ந் தேதி முதல் தொடங்கி இருக்கின்றன. 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளை தொடர்ந்து, தற்போது 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாகவும், அவ்வாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேரடி வகுப்புகள்

ஏற்கனவே 9, 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, அவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதேபோல், தற்போது 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலும் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story