ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்


ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 10 Feb 2021 10:04 PM GMT (Updated: 10 Feb 2021 10:04 PM GMT)

ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஊரக உள்ளாட்சித்துறையின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

திடக்கழிவு மேலாண்மை பணிகளை, தனியாருக்கு ஒப்படைத்த பின் ஏற்கனவே உள்ள பணியாளர் 100 சதவீதம் பேரையும், வேலையிழப்பு இல்லாமல் அனைவரையும் தனியார் அமைப்பில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கூட்டு குடிநீர் திட்ட பணி

சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் திட்ட பணிகள், சாலை பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மேலும் சிறப்பு சாலை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ஒப்பந்த புள்ளி கோர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும்.

வாணியம்பாடி நகராட்சியில் பொதுப்பணித்துறை இடத்தில் பாலம் கட்டும் பணி மற்றும் கடலூர் உள்பட 9 இடங்களில் பஸ் நிலையங்கள் கட்டும் பணிகளை அதற்கான அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்.

சாலை சீரமைப்பு பணிகள்

பேரூராட்சிகள் இயக்ககத்தின் சார்பில் 2020-21-ம் ஆண்டு திட்டப்பணிகளில் ஒப்பந்த புள்ளி கோர வேண்டிய பணிகள் மற்றும் 9 புதிய மண்டலங்கள் உருவாக்கும் பணிகளையும் அதிகாரிகள் முடிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், நகர்புற சாலை சீரமைப்பு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story