மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு


மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Feb 2021 11:45 PM GMT (Updated: 10 Feb 2021 10:12 PM GMT)

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.களுக்கு எதிராக உரிமை மீறல் குழு அனுப்பிய 2-வது நோட்டீசை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தமிழகத்தில் தாராளமாக கிடைப்பதாக தி.மு.க. உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், அந்த புகையிலை பொருட்களை அவைக்குள் கொண்டு சென்று காட்டினர். தி.மு.க. உறுப்பினர்களின் இந்த செயல் அவையின் உரிமை மீறல் என்று கூறி எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விதிகளை பின்பற்றி இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட வில்லை என்று கூறி அதை ரத்து செய்தது. உரிமை மீறல் குழு விரும்பினால் விதிகளை பின்பற்றி மீண்டும் நோட்டீஸ் அனுப்பலாம் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து உரிமை மீறல் குழு மீண்டும் 2-வது நோட்டீஸ் அனுப்பியது.

முன்அனுமதி பெறவில்லை

இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா விசாரித்து, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தார். இதன் பின்னர், இந்த வழக்கை நீதிபதி விசாரித்தார். சட்டசபை செயலாளர் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், உரிமை மீறல் குழு சார்பில் தமிழக அரசின் மூத்த சிறப்பு வக்கீல் ஏ.எல்.சோமயாஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ, க்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, அமீத்ஆனந்த் திவாரி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நேற்று பிறப்பித்தத உத்தரவில் கூறியிருப்பதாவது:-

எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. உறுப்பினர்கள் தன்னிடம் முன் அனுமதி இல்லாமல் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகளை அவைக்குள் கொண்டு வந்ததால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உரிமை மீறல் குழுவுக்கு பரிந்துரைப்பதாக கூறியுள்ளார். அதாவது, தன்னிடம் அவர்கள் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறாரே தவிர, அந்த பொருட்களை காண்பிக்க தடை இருப்பதாக கூறவில்லை.

தடை இல்லை

மேலும் எது உரிமை மீறல்? அதற்கு என்ன தண்டனை? என்று தெளிவாக விதிகள் இல்லாதபோது, முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று கூற முடியாது. மனுதாரர்களுக்கு எதிராக முதலில் அனுப்பிய நோட்டீசில், தடை செய்யப்பட்ட பொருட்களை அவைக்குள் கொண்டு வந்தது உரிமை மீறல் செயல் என்று கூறப்பட்டுள்ளது. 2-வது நோட்டீசில், சபாநாயகரிடம் முன் அனுமதி பெறாமல் கொண்டு வந்தது உரிமை மீறல் செயல் என்று கூறப்பட்டுள்ளது.

சட்டசபை நடவடிக்கை குறிப்புகளை பார்க்கும்போது, முன் அனுமதி பெறாமல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பாக்கெட்டுக்களை கொண்டு வந்துள்ளதாக சபாநாயகர் கூறியிருக்கும்போது, அதை ஏன் முதலில் அனுப்பிய நோட்டீசில் உரிமை மீறல் குழு குறிப்பிடவில்லை? என்பதற்கான காரணம் கூறப்படவில்லை. குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும், அதை காண்பிப்பதற்கு தடை எதுவும் இல்லாதபோது, சபாநாயகரிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்ற கேள்வியே எழவில்லை.

ரத்து

இந்த வழக்கிற்கு சபாநாயகரும், சட்டசபை செயலாளரும் பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. உரிமை மீறல் குழுத் தலைவர் என்ற முறையில்தான் துணை சபாநாயகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.

எனவே, விதிமுறைகளை பின்பற்றி 2-வது நோட்டீசும் பிறப்பிக்கப்படாததால், அதை ரத்து செய்கிறேன்.

திருக்குறள்படி நடக்க வேண்டு்ம்

‘அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகை அறிந்து தூய்மை யவர்' என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார்.

அதாவது, ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மை உணர்ந்து, அதற்கு ஏற்ப ஆராய்ந்து பேசுவார்கள் என்று அதற்கு பொருளாகும். எனவே, தினமும் ஒரு திருக்குறள் கூறி சட்டசபை கூட்டத் தொடரை தொடங்குவது மட்டுமல்லாமல், அவைக்குள்ளேயும், வெளியேயும் திருக்குறளின்படி எம்.எல்.ஏக்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story