நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பம் இல்லை என பிரேமலதா பேட்டி


நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பம் இல்லை என பிரேமலதா பேட்டி
x
தினத்தந்தி 13 Feb 2021 12:30 AM GMT (Updated: 12 Feb 2021 9:09 PM GMT)

தே.மு.தி.க. அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்தார். அ.தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னை, 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்தநிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சியின் கொடி நாளான நேற்று அவர் தொண்டர்களை சந்தித்தார். இதற்காக அவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து திறந்தவெளி வேனில் வந்தார்.

வேனில் நின்றபடி, சாலையில் நின்றிருந்த தொண்டர்களை பார்த்து அவர் கைசையத்தார். வெகு நாட்களுக்கு பிறகு தங்களது தலைவரை நேரில் பார்த்ததால் தொண்டர்கள் ‘கேப்டன் வாழ்க’ என்று வாழ்த்து கோஷம் எழுப்பினர். சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜயகாந்த் புதுப்பொலிவுடன் தொண்டர்களை சந்தித்தது அக்கட்சியினர் இடையே மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது. விஜயகாந்திற்கும், அவரது மனைவியும், பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நலமாக இருக்கிறீர்களா...

அதனைத்தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் 118 அடி உயர கொடி கம்பத்தில் தே.மு.தி.க. கொடியை விஜயகாந்தும், பிரேமலதாவும் ஏற்றி வைத்தனர். கொடி ஏற்றி வைத்து விட்டு தொண்டர்களை பார்த்த விஜயகாந்த் 'எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா?' என்று கேட்டார். மேலும் அவர், ‘அனைவருக்கும் கொடிநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன், நன்றி, வணக்கம்' என்றார்.

தொடர்ந்து தொண்டர்களின் குழந்தைகளுக்கு ஜனனி, விஜயலதா என்று விஜயகாந்த் பெயர் சூட்டி மகிழ்ந்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலாவுடன் சந்திப்பா?

அ.தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இப்போது வரை நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவாக தொடங்க வேண்டும் என்று தான் கூறி வருகிறோம். அதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால் அ.தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

சசிகலாவை நான் சந்திக்க இருப்பதாக வந்த செய்தி தவறானது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் அளவிற்கு தே.மு.தி.க.விற்கு வலிமை இருக்கிறது. தொண்டர்கள் விரும்பினால் நான் நிச்சயமாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்று முடிவு செய்யவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் நிச்சயம் வருவார். தொலைக்காட்சி விவாதங்களில் இனி தே.மு.தி.க. பங்கேற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story