பிரதமர் மோடி வருவதையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு இன்று பாதுகாப்பு ஒத்திகை


பிரதமர் மோடி வருவதையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு இன்று பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 13 Feb 2021 1:00 AM GMT (Updated: 12 Feb 2021 11:13 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி இன்று (சனிக்கிழமை) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. பாதுகாப்புக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகிறார்கள்.

சென்னை, 

பிரதமர் நரேந்திரமோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகிறார். காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் நரேந்திர மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில், சென்னை தீவுத்திடல் அருகே உள்ள அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தரும் அவருக்கு வழி நெடுக பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவர் பிற்பகல் 1.30 மணி அளவில் தனி விமானம் மூலம் கேரளா செல்கிறார்.

சாலை வழியாகவும்...

பிரதமர் நரேந்திரமோடி விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளம் வந்து இறங்குவார் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாகவும், நேரு உள் விளையாட்டு அரங்கம் வருவதற்கு மாற்று ஏற்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. அந்த சாலை மார்க்க பாதையிலும் வழி நெடுக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கம் செல்லும் சாலை முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தில் இப்போதிருந்தே வைக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி நடக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கம் உள்ள பகுதியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. பிரதமரின் பாதுகாப்பு படை போலீசார் நேற்று முன்தினம் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு விட்டனர். மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார் மாறுவேடத்தில் இப்போதிருந்தே, கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

10 ஆயிரம் போலீசார் குவிப்பு

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்அகர்வால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் வருகையையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்படுகிறார்கள். பிரதமர் செல்லும் பகுதியில் ‘டிரோன்’ கேமராவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் செல்லும் பகுதியில் இன்று (சனிக்கிழமை) பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்படும். பிரதமரின் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story