இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் சிறப்பு புலன் விசாரணை குழு ஐகோர்ட்டு உத்தரவு


இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் சிறப்பு புலன் விசாரணை குழு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Feb 2021 2:16 AM GMT (Updated: 14 Feb 2021 2:16 AM GMT)

இன்ஸ்சூரன்ஸ் மோசடி வழக்குகளை விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் சிறப்பு புலன் விசாரணை குழுவை அமைக்க தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

போலி இன்சூரன்ஸ் ஆவணங்கள் மூலம் வாகன விபத்து வழக்குகளை தமிழகம் முழுவதும் பல நீதிமன்றங்களில் தொடரப்பட்டன. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு விசாரிக்க தொடங்கியதும், அந்த வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் பலர் ஆன்லைன் வாயிலாக போலி இன்சூரன்ஸ் ஆவணங்களை தயாரித்து மோசடி செய்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

புலன் விசாரணை குழு

இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கு என்று சிறப்பு புலன் விசாரணை குழுவை தமிழக டி.ஜி.பி. உருவாக்கி, இந்த குழுவுக்கு கூடுதல் டி.ஜி.பி. பதவிக்கு குறையாத போலீஸ் அதிகாரியை தலைவராக நியமிக்க வேண்டும். இந்த சிறப்பு புலன் விசாரணை குழு, போலி இன்சூரன்ஸ் ஆவணங்கள் மூலம் விபத்து இழப்பீடு கோரி தொடரப்பட்ட மோசடி வழக்குகள் குறித்து விசாரிக்க வேண்டும்.

போலி ஆவணங்கள் மூலம் வழக்கு தொடர்ந்து, பின்னர் அதை வாபஸ் பெற்றிருந்தாலும், அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும். மனுதாரர் நிறுவனத்துக்கு எதிராக மட்டும் அல்லாமல், அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும் எதிரான மோசடி வழக்குகளை இந்த குழு விசாரிக்க வேண்டும். இதுதொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பெற்று, வழக்கு பதிவு செய்து, அதன்பின்னர் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 2-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story