காதலர் தின கொண்டாட்டத்திற்காக ஓசூரில் இருந்து 20 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட குறைவு


காதலர் தின கொண்டாட்டத்திற்காக ஓசூரில் இருந்து 20 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட குறைவு
x
தினத்தந்தி 14 Feb 2021 3:09 AM GMT (Updated: 14 Feb 2021 3:09 AM GMT)

காதலர் தின கொண்டாட்டத்திற்காக ஓசூரில் இருந்து 20 லட்சம் ரோஜா மலர்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட மிகவும் குறைவு ஆகும்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர், பேரிகை, கெலமங்கலம், தளி, அகலக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட் ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வகையான ரோஜா மலர்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் ஆகிய விழா கொண்டாட்டங்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் காதலர் தினத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி ரோஜா மலர்கள் ஓசூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அன்னிய முதலீடுகளும் பெறப்படுகின்றன.

ரூ.30 கோடி வர்த்தகம்

இந்த நிலையில், இந்தாண்டு காதலர் தின கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டு ஆர்டர்கள் குவியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத இறுதி நாட்களில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ரோஜா மலர்களை அனுப்பி வைக்க ஆர்டர்கள் வரும். ஆனால் இந்தாண்டு கொரோனா தாக்கம் காரணமாக காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா மலா்களுக்கான ஆா்டா்கள் அதிக அளவில் வரவில்லை.

இதனால் ஓசூர் பகுதி மலர்களுக்கு கடந்த ஆண்டுகளை விட ஆர்டர்கள் கிடைக்காமல் வெறும் 20 லட்சம் மலர்களே ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் ரூ.30 கோடி அளவில் மட்டுமே வர்த்தகம் நடைபெற்று உள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்தாண்டு மிகமிக குறைந்த அளவில் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

விவசாயிகள் கவலை

இதனால் ரோஜா சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்கள் வழக்கம்போல் அதிகளவில் ஏற்றுமதியாகி இருந்தால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

இருந்த போதிலும், இந்தியாவில் உள்ளூர் சந்தைகளில் ஓசூர் பகுதி ரோஜா மலர்களுக்கு நல்ல விலையும், அதிகளவில் வரவேற்பும் கிடைத்திருப்பது, ரோஜா மலர் சாகுபடியாளர்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.


Next Story