தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று 182 பெண்கள் உள்பட 477 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று 182 பெண்கள் உள்பட 477 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 Feb 2021 3:23 AM GMT (Updated: 14 Feb 2021 3:23 AM GMT)

தமிழகத்தில் நேற்று 182 பெண்கள் உள்பட 477 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்து 873 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 295 ஆண்கள், 182 பெண்கள் என மொத்தம் 477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 149 பேரும், செங்கல்பட்டில் 47 பேரும், கோவையில் 43 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரத்தில் தலா இருவரும், அரியலூர், பெரம்பலூர், திருப்பத்தூரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில், 12 வயதுக்குட்பட்ட 30 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 123 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 63 லட்சத்து 95 ஆயிரத்து 635 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 44 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 10 ஆயிரத்து 457 ஆண்களும், 3 லட்சத்து 34 ஆயிரத்து 158 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 35 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 30 ஆயிரத்து 661 குழந்தைகளும், 12 வயது முதல் 60 வயது வரை 7 லட்சத்து 266 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 723 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

5 பேர் உயிரிழப்பு

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 8-ந்தேதி முதல் நேற்று வரை தமிழகம் வந்த 1,865 பேரில், 1,625 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1,592 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 26 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் 3 பேரும், தனியார் மருத்துவமனைகளில் இருவரும் என மொத்தம் 5 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் சென்னை, தர்மபுரி, நீலகிரி, திருவள்ளூர், தூத்துக்குடியில் தலா ஒருவர் என 5 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 12 ஆயிரத்து 413 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

4 ஆயிரத்து 275 பேருக்கு சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 482 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 129 பேரும், கோவையில் 52 பேரும், செங்கல்பட்டில் 38 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 962 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்து 275 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story