மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி - முதலமைச்சர் பழனிசாமி


மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 14 Feb 2021 8:01 AM GMT (Updated: 14 Feb 2021 8:01 AM GMT)

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று ஒருநாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 7.50 மணியளவில்  சென்னை  புறப்பட்ட பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்துக்கு காலை 10.35 மணிக்கு பிரதமர் மோடி வந்து சேர்ந்தார். 

காலை 11 மணியளவில் சென்னை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் எல். முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் வரவேற்றனர். 

சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி வந்து சேர்ந்தார். அவரை வரவேற்று அதிமுக, பாஜக சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ் தாய் வாழ்த்துடன் அரசு விழா தொடங்கியது.

விழா மேடையில் பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த முதலமைச்சர் பழனிசாமி, அவருக்கு கிருஷ்ணர் சிலையை நினைவு பரிசாக அளித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயல‌லிதாவின் உருவ படங்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவரை காண்பது அரிது” என்று புகழாரம் சூட்டினார். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த அவர், காவிரி பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர், தனது அழைப்பை ஏற்று தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். கொரோனா தடுப்பூசியால் இந்தியாவிற்கு உலக அளவில் பாராட்டு கிடைத்து வருவதாகவும், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து மெட்ரோ ரயில் திட்டம், நெடுஞ்சாலை திட்டம், கல்லணை கால்வாய் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அரசு சார்பில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்காக போதுமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Next Story