பிரதமரிடம் மதுரை எய்ம்ஸ், நீட் விலக்கு, 7 பேர் விடுதலை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் பழனிசாமி கேட்பாரா? - மு.க.ஸ்டாலின்


பிரதமரிடம் மதுரை எய்ம்ஸ், நீட் விலக்கு, 7 பேர் விடுதலை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் பழனிசாமி கேட்பாரா? - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 14 Feb 2021 10:43 AM GMT (Updated: 14 Feb 2021 10:43 AM GMT)

சென்னை வந்துள்ள பிரதமரிடம் மதுரை எய்ம்ஸ், நீட் விலக்கு, 7 பேர் விடுதலை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் பழனிசாமி கேட்பாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை, 

சென்னை வந்துள்ள பிரதமரிடம் மதுரை எய்ம்ஸ், நீட் விலக்கு, 7 பேர் விடுதலை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் பழனிசாமி கேட்பாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னதாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியை நிறைவு செய்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சீர்மிகு சிதம்பரத்தில் - கலைமிகு சிதம்பரத்தில் - கல்விமிகு சிதம்பரத்தில் - இயற்கை சூழ் சிதம்பரத்தில் நடைபெறக் கூடிய இந்த மாபெரும் மக்கள் திரளின் முன்னால் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மக்களிடம் செல், மக்கள் குறைகளைக் கேள், மக்களோடு இரு என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அந்த அடிப்படையில் உங்களிடம் உங்கள் குறைகளைக் கேட்பதற்காக வந்துள்ளேன். கேட்பது மட்டுமல்ல, அதை நிறைவேற்றுவதற்கான காலம் கனிந்து வருவதால் தான் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். தமிழகத்தில் ஆட்சியை அமைத்தாலும், மத்தியில் நமது கூட்டணி அமைந்தாலும், தமிழ் மக்களுக்கு -  தமிழ்நாட்டுக்கு வேண்டிய திட்டங்களை உருவாக்கிய கட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

13 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக ஒரு திட்டத்தையாவது கொண்டு வந்ததா என்று பழனிசாமி கேட்கிறார். பழனிசாமி, மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த போதெல்லாம் மத்திய ஆட்சிக்கு தலையாட்டிக் கொண்டு இருந்த கட்சி அல்ல திமுக. மத்திய ஆட்சியின் மூலமாக எதையெல்லாம் தமிழகத்துக்கு கொண்டு வர முடியுமோ, அத்தனையும் கொண்டு வந்த கட்சி தான் திமுக.

திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகித்த காங்கிரசு கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு என்னென்ன நன்மைகள் எல்லாம் செய்துள்ளோம் என்பதை நான் பட்டியல் போட ஆரம்பித்தால் இன்று முழுவதும் பட்டியல் போடலாம். அந்தளவுக்கு அபரிதமான திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்து நிறைவேற்றிக் காட்டினோம்.

எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததாகச் சொல்லி இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முதல் செங்கல் கூட வரவில்லை.  11 மருத்துவக் கல்லூரியை உருவாக்கியதாகச் சொல்கிறார். அவர் உருவாக்கவில்லை. அனுமதி வாங்கி இருக்கிறார். இந்தக் கல்லூரிகள் அமைய இரண்டு மூன்றுகள் ஆகும். அதனால் இதிலும் பழனிசாமி பெருமை கொண்டாட முடியாது. 

கேட்ட நிதியை மத்தியில் இருந்து வாங்க முடிந்ததா? பேரிடர் நிதியை வாங்க முடிந்ததா? நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்க முடிந்ததா? காவிரி உரிமையை நிலைநாட்ட முடிந்ததா? தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய முடிந்ததா? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடிந்ததா? இந்தி திணிப்பை தடுக்க முடிந்ததா? மத்திய அரசின் பணியிடங்களில் தமிழர்கள், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். 

தான் என்ன சாதனை செய்தேன் என்பதை அவரால் சொல்ல முடியவில்லை. வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார். எதை எடுத்தாலும் தமிழ்நாடு முதலிடம் என்கிறார். தொழிலில் முதலிடம், கல்வியில் முதலிடம், நிதியில் முதலிடம் என்று அவரே சொல்லிக் கொள்கிறார்.

தோல்வி பயம் பழனிசாமிக்கு வந்துவிட்டது. கடந்த 9 ஆம் தேதி கந்தனேரியில் பேசிய பழனிசாமி, “ஆட்சியைப் பிடிக்க வேண்டிய எண்ணம் எனக்கு இல்லை" என்று பேசி இருக்கிறார். ஆட்சி அவர் கையில் இருந்து நழுவப் போகிறது. அதனால் தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய எண்ணம் எனக்கு இல்லை என்கிறார் பழனிசாமி.

தான் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் இல்லை என்கிறார். ஆட்சியை பிடிக்கும் எண்ணம் இருந்தாலும், அவருக்கு ஆட்சி கிடைக்கப் போவது இல்லை. ஆட்சி நம் கைக்குத் தான் வரப்போகிறது. அதனைத் தான் தமிழ்நாடு முழுவதும் நான் பார்க்கும் எழுச்சி சொல்கிறது. உங்களது எழுச்சியும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது. இந்த எழுச்சி தமிழ்நாட்டின் மலர்ச்சிக்கு வித்திடட்டும்.

தலைவர் கலைஞர் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. ஆனாலும், அவரது எண்ணங்களும் உணர்வுகளும் நமது உள்ளத்தில் இருக்கிறது. அவரால் உருவாக்கப்பட்டவர்கள் நாம். அடுத்தமுறை ஆட்சியைப் பார்த்துவிட்டுதான் கண் மூட வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பை நாம் அவருக்கு வழங்கவில்லை. அவர் மறைந்ததற்குப் பின் அண்ணாவின் அருகில்தான் ஓய்வெடுக்க வேண்டும் என்று எண்ணினார். இந்த நாட்டிற்கு குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களை உருவாக்கித் தந்த கலைஞருக்கு அனுமதியில்லை என்றார்கள். தமிழகத்திலும் – இந்தியாவிலும் உள்ள தமிழகர்களுக்கு மட்டுமல்ல; உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்குப் பாதுகாவல் அரணாக விளங்கிய தலைவர் கலைஞருக்கு இடமில்லை என்றார்களே நயவஞ்சகர்கள்!? நீதிமன்றம் சென்று போராடி – வாதாடி இடம் பெற்றோம்” என்று கூறினார்.

Next Story