சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி ஊழல் கறைபடிந்த கைகளை உயர்த்தி காட்டி உள்ளார் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி ஊழல் கறைபடிந்த கைகளை உயர்த்தி காட்டி உள்ளார் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Feb 2021 1:34 AM GMT (Updated: 15 Feb 2021 1:34 AM GMT)

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி ஊழல் கறைபடிந்த கைகளை உயர்த்தி காட்டி உள்ளார் என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் தி.மு.க. சார்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற தலைப்பில் பிரசார நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஒருவருக்கு மட்டும் சந்தேகம்

நான் சொன்னதை செய்வேன். செய்வதைத்தான் சொல்வேன். உங்கள் கோரிக்கைகளை கேட்டுவிட்டு மட்டும் நான் போய் விடவில்லை. உங்களுடைய மனுவை எழுதி வாங்கி வைத்திருக்கிறேன். என்னால் உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியும்.

என்னை நம்பி நீங்கள் மனு கொடுத்து உள்ளீர்கள். உங்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். இதில் ஒரே ஒருவருக்கு மட்டும் தான் சந்தேகம் உள்ளது. அவரது பெயர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு சந்தேகம் வரத்தான் செய்யும்.

வாக்குறுதியை நிறைவேற்றாதவர்

ஏனென்றால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாதவர் அவர். தனக்கு பதவி கொடுத்த சசிகலாவின் வாக்குறுதியையே நிறைவேற்றாத அவர், நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியையா நிறைவேற்ற போகிறார்? நான் நடத்துகிற கூட்டத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு பயம் ஏற்படுகிறது.

கோடிக்கணக்கான மக்கள் அவரை தோற்கடிக்க தயாராகி விட்டனர். ஆட்சி முடிய இன்னும் சில நாட்களே இருக்கிற நிலையில், 1100 என்கிற எண்ணுக்கு போன் பண்ணினால் குறைகள் அனைத்தும் தீரும் என்று சொல்கிறார். இந்த திட்டம் ஏற்கனவே ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம்.

புதிய திட்டம்போல் அறிவிப்பு

மக்களின் குறைகளை உடனுக்குடன் களைய இந்த எண்ணுக்கு அழையுங்கள் என்று சொல்லி அம்மா அழைப்பு மையம் என்ற இந்த திட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இப்போது மீண்டும் முதல்-அமைச்சர் சேவை எண் திட்டம் என புதிய திட்டம்போல அறிவித்துள்ளார்.

பழைய திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தி இருந்தாலே, புதிதாக ஒரு திட்டத்தை முதல்-அமைச்சர் கொண்டுவந்திருக்க தேவையில்லை. என்னிடம் இவ்வளவு கோரிக்கை மனுக்களும் வந்திருக்காது. இந்த அரசாங்கம் செயல்படவில்லை என்கிற காரணத்தால் தான், இத்தனை ஆயிரம் மக்கள் வந்து என்னிடம் மனுக்கள் கொடுக்கிறார்கள்.

ஊழல் கறை படிந்த கைகள்

இன்று (அதாவது நேற்று) சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் கலந்து கொண்டார். தேர்தல் வந்துவிட்டது. எனவே அடிக்கடி தமிழகம் வருவார். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே தொடங்கிய திட்டத்தை மீண்டும், மீண்டுமா தொடங்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிர்ச்சி அடைந்து கேள்வி எழுப்பினார்.

கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் தான் இந்த திட்டம். இதை பார்க்கும்போது பிரதமரையே ஏமாற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி, தயாராகி விட்டார் என்று தோன்றுகிறது. விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் கைகளை தூக்கி போஸ் கொடுத்துள்ளார். 2 கைகளும் ஊழல் கைகள்.

சென்னை வந்த பிரதமர் ஊழல் கறைபடிந்த கைகளை உயர்த்தி காண்பித்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது, இவர்கள் செய்த தவறுகளுக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்று ஒப்புக்கொள்கிறாரா? நான் சொல்வதைத்தான் இவர்கள் செய்கிறார்கள் என்று சொல்கிறாரா? என்பது தான் நான் கேட்கிற கேள்வி.

தண்டிக்கும் தேர்தல்

அ.தி.மு.க.வின் கறை படிந்த கரங்களை தண்டிக்கும் தேர்தல்தான் வரக்கூடிய சட்டசபை தேர்தல். அப்போது தி.மு.க. ஆட்சி மலரும். உங்கள் கவலைகள் அனைத்தும் தீரும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story