செண்டை மேளதாளங்கள் முழங்க சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழிநெடுகிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் ஆர்ப்பரிப்பு


செண்டை மேளதாளங்கள் முழங்க சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழிநெடுகிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் ஆர்ப்பரிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2021 1:49 AM GMT (Updated: 15 Feb 2021 1:49 AM GMT)

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு செண்டை மேளதாளங்கள் முழங்க கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுக அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் ஆர்ப்பரிப்புடன் கூடிய வரவேற்பை அளித்தனர்.

சென்னை, 

ரூ.3 ஆயிரத்து 770 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைக்கவும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னைக்கு வந்தார். இதற்கான விழா, சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு, காலை 10.32 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக அரசு தலைமைச்செயலாளர் ராஜீவ்ரஞ்சன், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, ராணுவ தலைமை அதிகாரி பிரகாஷ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், அரசு இணை செயலாளர் (நெறிமுறைகள்) ஏ.ஆர்.ராகுல்நாத் ஆகியோர் வரவேற்றனர்.

கராத்தே தியாகராஜனுக்கு வாழ்த்து

தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மகளிரணி தலைவர் மீனாட்சி, பிரிவு தலைவர்கள் ராத்மா சங்கர், ஷெல்வி தாமு உள்பட பா.ஜ.க.வினர், இந்திய மக்கள் கல்வி மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தேவநாதன் யாதவ், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோரும், சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன், சிவாஜிகணேசன் மகனும், பட தயாரிப்பாளருமான ராம்குமார் ஆகியோரும் பிரதமரை வரவேற்றனர்.

இந்த வரவேற்பின்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசிய கராத்தே தியாகராஜன் “நான் சென்னையின் மேயராக இருந்துள்ளேன். காங்கிரசில் இருந்துவந்த நான், தற்போது உங்கள் மீதான ஈர்ப்பு காரணமாக பா.ஜ.க.வுக்கு வந்திருக்கிறேன்” என்றார். இதனையடுத்து கராத்தே தியாகராஜனை பிரதமர் மோடி தட்டிக்கொடுத்து “வரவேற்கிறேன்” என கூறி வாழ்த்து தெரிவித்தார்.

கவர்னர், முதல்-அமைச்சர்

விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பை தொடர்ந்து காலை 10.58 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திரமோடி புறப்பட்டு, சென்னை நேப்பியர் பாலம் அருகேயுள்ள ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்துக்கு காலை 11.10 மணிக்கு வந்தார். பிரதமரின் பாதுகாப்புக்காக அவரது ஹெலிகாப்டருக்கு முன்னும், பின்னும் 2 ஹெலிகாப்டர்களில் பாதுகாப்புப்படை வீரர்கள் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தி்ல் பிரதமர் மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ப.தனபால், அமைச்சர் டி.ஜெயக்குமார். தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காலை 11.20 மணிக்கு சாலை வழியாக நேரு உள் விளையாட்டு அரங்குக்கு பிரதமர் மோடி காரில் புறப்பட்டார்.

உற்சாக வரவேற்பு

அவர் வந்த வழித்தடங்களில் ரிப்பன் மாளிகை, தீவுத்திடல் உள்பட 5 இடங்களில் பா.ஜ.க. - அ.தி.மு.க.சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன.. இதில் குதிரையாட்டம், காவடியாட்டம், பொம்மலாட்டம், காவடி ஆட்டம் என கலைஞர்கள் நடனமாடி பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க, செண்டை மேளம் வாசிப்புடன் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதேபோல நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் திரண்டு வந்திருந்த அ.தி.மு.க.வினரும், பா.ஜ.க.வினரும் சாலையின் இரு ஓரங்களிலும் நின்று பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க காத்திருந்தனர். இதனால் அடையாறில் இருந்து விழா நடைபெறும் பெரியமேடு பகுதி வரை போலீசார் அதிகளவில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

கையை அசைத்து வரவேற்பை ஏற்றார்

அந்த வகையில் சாலையின் இரு ஓரங்களிலும் கயிறு கட்டப்பட்டு, கூட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. தொடர்ந்து ‘பாரத் மாதா கி ஜே’, ‘பிரதமர் மோடி வாழ்க’ எனும் வாழ்த்து கோஷங்களும் எழுப்பப்பட்டு கொண்டே இருந்தன..

அந்தவகையில் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்டு மிதமான வேகத்தில் வந்த பிரதமரின் கார், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் வழித்தடங்களில் மெதுவாகவே சென்றது. இதனால் இதர கார்களும் மெதுவாக ஊர்ந்து சென்றன. கலைஞர்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றும், வழிநெடுகிலும் திரண்டிருந்த பா.ஜ.க.-அ.தி.மு.க.வினர் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டும் கையை அசைத்தபடி பிரதமர் நரேந்திரமோடி காரில் சென்றார். தீவுத்திடல், கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்டிரல், ரிப்பன் மாளிகை வழியாக உற்சாக வரவேற்பை ஏற்றபடி விழா நடைபெறும் இடமான பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு காலை 11.35 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி வந்தார்.

கொச்சிக்கு புறப்பட்டு சென்றார்

அங்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடி நேரு உள் விளையாட்டு அரங்கில் இருந்து மதியம் 1.15 மணிக்கு சாலை வழியாக காரில் புறப்பட்டார். வந்தவழியாக சென்று ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்துக்கு மதியம் 1.25 மணிக்கு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு, விமான நிலையத்தை மதியம் 1.57 மணிக்கு அடைந்தார். அங்கிருந்து மதியம் 2.20 மணிக்கு, தனி விமானத்தில் கொச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையம் திரும்பிய பிரதமர் நரேந்திரமோடியை தமிழக அரசு தலைமைச்செயலாளர் ராஜீவ்ரஞ்சன், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, ராணுவ தலைமை அதிகாரி பிரகாஷ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், அரசு இணை செயலாளர் (நெறிமுறைகள்) ஏ.ஆர்.ராகுல்நாத், பா.ஜ.க. அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர், அலுவலக செயலாளர் எம்.சந்திரன், செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன், தேசியக்குழு உறுப்பினர் கே.எஸ்.சவுந்திரன், செயற்குழு உறுப்பினர் நடிகர் ராதாரவி, மாவட்ட பொருளாளர் ஏ.வேதாசுப்பிரமணியம், அருணாச்சலம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் கே.காயத்ரி தேவி உள்பட பா.ஜ.க.வினரும் வழியனுப்பி வைத்தனர்.

Next Story