சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியான முயற்சிகளை செய்து வருகிறோம் டி.டி.வி. தினகரன் பேட்டி


சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியான முயற்சிகளை செய்து வருகிறோம் டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 15 Feb 2021 2:44 AM GMT (Updated: 15 Feb 2021 2:44 AM GMT)

சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை செய்து வருவதாக டி.டி.வி. தினகரன் கூறினார்.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் 
கூறியதாவது:-

அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட சிலரது பேச்சுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அ.ம.மு.க.வில் தான் உள்ளனர். இந்த இயக்கம் மட்டும் தான் முதல் அணி, இதில் மூன்றாவது, நான்காவது அணி எல்லாம் இல்லை.

என் மீது குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே ஒரு கும்பல் இருக்கிறது. அதற்கெல்லாம் நான் கருத்து கூற முடியாது. எங்களது இலக்கு என்பது ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான்.

அசிங்கப்படுத்தி கொள்கிறார்கள்

நம்ம ஊரில் ஊத்தி கொடுப்பது என்ன குலத்தொழிலா? யாரோ உளறுவதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. கொள்ளைக் கூட்டக் கொள்ளையர்கள் அடுத்தவர்களை கொள்ளையர்கள் என்று தான் கூறுவார்கள். ஊத்தி கொடுப்பவர்கள் அடுத்தவர்களை ஊத்தி கொடுப்பவர் என்று தான் சொல்லுவார்கள்.

இனிமேல் நான் அடிமையாக இருக்க மாட்டேன் என கூறுகிறார்கள் என்றால், அவர்கள் ஏற்கனவே அடிமையாக இருந்து இருக்கிறார்கள் என்பது தானே அர்த்தம். அவர்கள் சேற்றிலே கல்லைப்போட்டு தனக்குத்தானே அசிங்கப்படுத்தி கொள்கிறார்கள்.

அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்

ஸ்லீப்பர் செல் என்பவர்கள் எங்கள் நலன் விரும்பிகள், ஜெயலலிதாவின் ஆட்சியை விரும்புபவர்கள். அவர்கள் வரும் நேரத்தில் வருவார்கள். நாங்கள் நிச்சயம் அ.தி.மு.க என்ற இயக்கத்தை மீட்டெடுப்போம். தமிழ்நாட்டு மக்கள் அதற்கான வாய்ப்பை எங்களுக்கு தருவார்கள்.

அ.ம.மு.க வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. சசிகலா உறவினர்களின் சொத்துக்கள் அரசு உடைமையாக்கப்படுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. அவைகள் சுதாகரன் ச ொத்தோ, இளவரசி சொத்தோ கிடையாது அது கம்பெனி சொத்து. நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கிறது.

சசிகலா தேர்தலில் போட்டியிட...

சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளை செய்து கொண்டுள்ளோம். அதில் வெற்றி பெற்றவுடன் அவர் போட்டியிடுவார். சசிகலா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story