வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்: வடசென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது


வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்: வடசென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது
x
தினத்தந்தி 15 Feb 2021 3:07 AM GMT (Updated: 15 Feb 2021 3:07 AM GMT)

மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம் வடசென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என்று சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை, 

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையில் முதலாவது வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்தப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலும், பின்னர் விம்கோ நகரில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலும் அமைச்சர் டி.ஜெயகுமார் நேற்று பயணம் செய்தார். மெட்ரோ ரெயிலின் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் இயக்கம் குறித்து அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளித்தனர்.

பிரதமர் தொடங்கி வைத்தார்

பின்னர் அமைச்சர் டி.ஜெயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. முதல் வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் விரிவாக்கமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

நெரிசல் மிகுந்த வடசென்னை பகுதி என்ற அடிப்படையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் வடசென்னையை சார்ந்தவர்கள் என்ற முறையில் இந்த திட்டத்தை கூறிய உடன், அதற்கான திட்டத்தை தீட்டி தேவையான நிதியை ஒதுக்கினார். தற்போது இந்த திட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் தலைமையில், பிரதமர் தொடங்கி வைத்து உள்ளார்.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

பொதுமக்களாக பார்க்கும்போது எனக்கு இது ஒரு மகிழ்ச்சிகரமான நாள். மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதி, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி, பலமுறை நானே போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளேன். அதனால் இந்த மெட்ரோ ரெயில் திட்டம் மூலம் வடசென்னையில் இருந்து சென்னை மைய பகுதிகளுக்கு விரைவாக செல்ல உதவியாக இருக்கும். வடசென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு இது ஒரு மிகப்பெரிய தீர்வாக அமைந்துள்ளது. மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம் வடசென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது

மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட திட்டம் வரும்போது சென்னையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story