தமிழகத்தில் ரூ.8,126 கோடியில் திட்டங்கள் சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


தமிழகத்தில் ரூ.8,126 கோடியில் திட்டங்கள் சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Feb 2021 3:53 AM GMT (Updated: 15 Feb 2021 3:53 AM GMT)

தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலானதிட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை, 

தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு நாள் அரசுமுறை பயணமாக சென்னை வந்தார்.

இதற்காக தனி விமானத்தில் காலை 10.32 மணிக்கு சென்னை வந்திறங்கிய பிரதமர் மோடியை விமான நிலையத்தில் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்துக்கு வந்திறங்கினார். அங்கு அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ப.தனபால் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். அங்கிருந்து பிரதமர் மோடி, விழா நடைபெற்ற நேரு உள்விளையாட்டு அரங்குக்கு சாலை வழியாக காலை சுமார் 11.30 மணிக்கு காரில் வந்து சேர்ந்தார்.

அங்கு அவர் சென்னை ஆவடி கனரக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்க நிறுத்தப்பட்டிருந்த அதிநவீன அர்ஜூன் மார்க் 1-ஏ பீரங்கியை பார்த்தார். அந்த பீரங்கிக்கு வீர வணக்கம் செலுத்தினார். அதன் அருகில் சென்று அங்கிருந்த ராணுவ அதிகாரியிடம் அந்த பீரங்கியைப் பற்றி கேட்டறிந்தார். அதை இயக்கிய வீரர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த அரங்கத்தின் பிரதான வாயிலுக்கு அவர் வந்தார். அங்கு தமிழக சட்டசபை சபாநாயகர் ப.தனபால், மூத்த அமைச்சர்கள், பா.ஜ.க. முன்னாள் எம்.பி. இல.கணேசன், கட்சி நிர்வாகி எச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மறைந்த முதல்-அமைச்சர்களுக்கு மரியாதை

அரங்கத்தில் உள்ள விழா மேடைக்கு காலை 11.35 மணிக்கு பிரதமர் மோடி வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ப.தனபால், அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் வந்தனர்.

மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் விழா தொடங்கியது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை அணிவித்தார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ப.தனபால் ஆகியோர் பொன்னாடைகளை பிரதமரின் கைகளில் வழங்கினர். முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் சாமி சிலைகளை அவருக்கு நினைவுப் பரிசாக அளித்தனர்.

திட்டங்களைதொடங்கினார் மோடி

விழா மேடைக்கு பிரதமர் மோடி வந்ததும், அங்கிருந்த அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள் பலமாக வாழ்த்தொலி எழுப்பினர். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையுரை ஆற்றினார்.

அதைத் தொடர்ந்து 3 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் தொடங்கி வைத்த மற்றும் அடிக்கல் நாட்டிய திட்டங்கள் வருமாறு:-

* ரூ.3,770 கோடி செலவில் முடிவுற்ற சென்னை மெட்ரோ ரெயில் முதல் கட்ட திட்டத்தின் 9.05 கி.மீ. விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோநகர் வரையில் பயணிகள் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

* சென்னை கடற்கரைக்கும், அத்திப்பட்டுக்கும் இடையே ரூ.293.40 கோடி செலவில் 22.1 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள 4-வது ரெயில் பாதையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

* விழுப்புரம்-கடலூர்-மயிலாடுதுறை-தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை - திருவாரூர் இடையில் ரூ.423 கோடி செலவில், மின்மயமாக்கப்பட்ட ஒருவழி ரெயில் பாதையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து, அந்த பாதையில் இரண்டு சரக்கு ரெயில் போக்குவரத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

* ரூ.2,640 கோடி செலவிலான, கல்லணை கால்வாய்க்கான விரிவாக்கம், புதுப்பித்தல், நவீனப்படுத்துதல் திட்டத்திற்கும், செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள சென்னை ஐ.ஐ.டி.யின் டிஸ்கவரி வளாகத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

* ஆவடி கனரக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன அர்ஜூன் மார்க் 1-ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதை உணர்த்தும் வகையில், அதன் மாதிரி வடிவத்தை ராணுவ தளபதி நரவனேயிடம் வழங்கினார்.

* பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்த திட்டங்களின் மதிப்பு ரூ.8,126 கோடியாகும். அந்த திட்டங்களின் குறும்படங்களும் விழாவின்போது ஒளிபரப்பப்பட்டன.

தமிழில் வணக்கம்...

இந்த திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி, ‘வணக்கம், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு” என்று தமிழில் பேசி தனது உரையைத் தொடங்கினார்.

காஷ்மீரில் புல்வாமாவில் 2019-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ந் தேதி பயங்கரவாதிகள் தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் பலியானதை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். அப்போது அவர், புல்வாமா தாக்குதல் நடந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த சம்பவத்தை இந்தியர் யாருமே மறக்க முடியாது. அதில் நாம் இழந்த நமது துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறோம். நமது பாதுகாப்பு படைகளால் நாம் பெருமை கொள்கிறோம். அவர்களின் தைரியமான செயல்பாடு, அடுத்த தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் என குறிப்பிட்டார்.

அவரது ஆங்கில பேச்சு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. விழா முடிந்த பின்பு, மேடையில் இருந்தபடி அனைவருக்கும் அவர் கையசைத்து விடைபெற்றார். விழாவுக்கு வந்திருந்த கூட்டணி கட்சியினருக்கு தனிப்பட்ட முறையில் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.

கைகளை உயர்த்திப்பிடித்த மோடி

மேடையை விட்டு புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின்கைகளைப் பிடித்து, மேடையின் விளிம்புக்கு அழைத்து வந்து, அவர்களின் கைகளை உயர்த்திப் பிடித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். பின்னர் அவர் அங்கிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விழாவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முன்வரிசையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமர இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

அதே வரிசையின் மற்றொரு பகுதியில், கூட்டணி கட்சிகளுக்கு இடவசதி செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் பா.ம.க. கட்சிநிர்வாகிகள் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, தே.மு.தி.க. கட்சியைச் சேர்ந்த பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. ஆகியோர் வந்து அமர்ந்திருந்தனர். கொரோனா தொற்று ஏற்படாத வகையில், சமூக இடைவெளி வசதியோடு இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.

Next Story