தமிழக மீனவர்களின் உரிமைகளை மத்திய அரசு எப்போதும் பாதுகாக்கும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி


தமிழக மீனவர்களின் உரிமைகளை மத்திய அரசு எப்போதும் பாதுகாக்கும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
x
தினத்தந்தி 15 Feb 2021 4:19 AM GMT (Updated: 15 Feb 2021 4:19 AM GMT)

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்கிறபோது, அவ்வப்போது இலங்கை கடற்படை, கடலோர காவல் படையின் தாக்குதலுக்கு ஆளாகும் துயர சம்பவங்கள் நடக்கின்றன.

சென்னை, 

இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடுகிறது. பல நேரங்களில் அவர்களின் படகுகளும் பறிக்கப்படுகின்றன. அவர்களது உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத சூழலும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று ரூ.8,126 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்க வந்த பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தமிழக மீனவர்களின் உரிமைகளை மத்திய அரசு எப்போதும் பாதுகாக்கும் என்ற புதிய நம்பிக்கையை அளித்தார்.

விவசாயிகளுக்கு பாராட்டு

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

சென்னையில் இருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அறிவார்ந்த, படைப்பாற்றல் கொண்ட மக்கள் நிறைந்த சென்னையில் உற்சாகமும், ஆற்றலும் நிறைந்திருக்கிறது. எனக்கு அன்பான வரவேற்பை அளித்த சென்னை மக்களுக்கு நன்றி.

636 கிலோ மீட்டர் தூர கல்லணை கால்வாய்க்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. 2.27 லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கான பாசன வசதியை இது முன்னேற்றும். தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறப்பாக பயனடையும். உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காகவும், நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்தியதற்காகவும் தமிழக விவசாயிகளை நான் பாராட்டுகிறேன். நமது கடந்த காலத்தின் பெருமைமிகு சின்னமாக கல்லணை திகழ்கிறது.

மெட்ரோ ரெயில் திட்டங்கள்

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து, விம்கோநகர் வரை செல்லும் மெட்ரோ ரெயில் திட்டம், கொரோனா தொற்றுக்கு இடையிலும், உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒப்பந்தத்தாரர்கள் பணிகளை மேற்கொண்டனர். ரெயில் பெட்டிகள் உள்நாட்டிலேயே வாங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், திட்டத்தின் 2-ம் கட்டத்தில் 119 கி.மீ தூரத்திற்கான பணிகளுக்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நகரிலும் இல்லாத வகையில், ஒரே சமயத்தில் இந்த அளவுக்கு நிதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட போக்கு வரத்து வசதியை அதிகரிப்பதுடன் வணிகத்துக்கும் உதவுகிறது. இதனால் தங்க நாற்கர வழித்தடத்தின் ஒரு பகுதியாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை கடற்கரை- எண்ணூர் - அத்திப்பட்டு பிரிவின் 4-ம் வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்துக்கும், காமராஜர் துறைமுகத்துக்கும் இடையே விரைவான சரக்கு போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். சென்னை கடற்கரை, அத்திப்பட்டு இடையேயான இந்த 4-வது வழித்தடம் இதற்கு உதவும். விழுப்புரம்-தஞ்சாவூர்-திருவாரூர் மின்மயமாக்கல் திட்டம், டெல்டா மாவட்டங்களுக்கு பெரிதும் பயன்படும். 228 கி.மீ தூர வழித்தடமானது, உணவு தானியங்களை மிக விரைவாக எடுத்துச் செல்வதற்கு உதவும்.

பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு

இந்தியா, பாதுகாப்புத்துறையில் தன்னிறைவை அடையும் மகத்தான முயற்சியை மேற்கொண்டுள்ளது. 2 பாதுகாப்பு தளவாட வழித்தடங்களில் ஒன்று தமிழகத்திற்கு வருகிறது. இந்த வழித்தடம் ஏற்கனவே ரூ.8,100 கோடிக்கான முதலீட்டு உத்தரவாதங்களைப் பெற்றுள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள அதிநவீன அர்ஜூன் மார்க் 1-ஏ பீரங்கி, உள்நாட்டு வெடி பொருட்களைப் பயன்படுத்தக்கூடியதாகும்.

தமிழகம் ஏற்கனவே, வாகன உற்பத்தியின் மையமாக திகழ்கிறது. பீரங்கி உற்பத்தி கேந்திரமாகவும் உருவெடுத்து வருகிறது. தமிழகத்தில் உருவாக்கப்பட்ட இந்த பீரங்கி நாட்டின், வடக்கு எல்லைகளைப் பாதுகாப்பதில் ஈடுபடுத்தப்படுவது, இந்தியாவின் ஒன்றுபட்ட உணர்வைப் பிரதிபலிக்கிறது.

படைகளுக்கு பாராட்டு

நமது ஆயுதப்படை உலகின் மிகச் சிறந்த நவீன படையாக திகழ்வதற்கு நாம் தொடர்ந்து பாடுபடுவோம். இந்தியாவை பாதுகாப்புத்துறையில் தற்சார்பு கொண்டதாக உருவாக்குவதில் முனைப்புடன் கவனம் செலுத்துவோம். இந்தியாவின் துணிச்சலை பறைசாற்றும் வகையில் நமது ஆயுதப்படைகள் திகழ்கின்றன.

நாட்டைப் பாதுகாப்பதில் முழு திறனுடன் உள்ளதை அவர்கள் மீண்டும், மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிரூபித்து வருகின்றனர். இந்தியா அமைதியில் நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை சமயம் கிடைக்கும் போதெல்லாம் உணர்த்தி வருகின்றனர். அதே தருணத்தில், இந்தியா தனது இறையாண்மையை எப்பாடுபட்டாவது பாதுகாக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் திகழும் நமது படைகளின் தீரம் போற்றுதலுக்குரியது.

கடல் பாசி பூங்கா

சென்னை ஐ.ஐ.டி.யின் டிஸ்கவரி வளாகம், புதுமை படைப்பதில் முன்னணி மையமாக உருவெடுக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவை உற்சாகத்துடனும், ஆக்கப்பூர்வமான சிந்தனையுடனும் உலகம் நோக்குகிறது. 130 கோடி இந்தியர்களின் கடின உழைப்பால்தான் இது சாத்தியமாகிறது.

இந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கையில், இந்தியாவின் கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு கூடுதல் கடன் சலுகைகளை உறுதி செய்ய இந்த நிதி நிலை அறிக்கையில் வகை செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடித்தலுக்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை உள்பட 5 இடங்களில் நவீன மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படவுள்ளன. கடல் பாசி பண்ணை குறித்து நம்பிக்கை கொண்டுள்ளோம். இது கடலோர சமுதாயத்தினரின் வாழ்க்கையை முன்னேற்றும். கடல் பாசி உற்பத்திக்காக, பல்நோக்கு கடல் பாசி பூங்கா தமிழகத்தில் வரவுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை ஏற்பு

தமிழகத்தின் கலாசாரம் உலக அளவில் புகழ்பெற்றது.

தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற அவர்களது நீண்டகால கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. அரசியல் சாசனத்தின் பட்டியலிடப்பட்டுள்ள6, 7 பெயர்களில் அல்லாது, அவர்களது பாரம்பரியமான பெயரில் அவர்கள் இனி அழைக்கப்படுவார்கள்.

தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் திருத்தம் செய்ய அரசியல் சாசனத்தைத் திருத்தும் வரைவு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அடுத்த அமர்வின்போது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு விடும்.

2015-ம் ஆண்டு டெல்லியில் தேவேந்திரர்களின் பிரதிநிதிகள் என்னை சந்தித்தபோது, பல அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும், எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தனர். அவர்களது ‘தேவேந்திர’ என்னும் சொல் என்னுடைய பெயரின் ‘நரேந்திர’ என்பதை ஒத்துள்ளது என்று நான் கூறினேன். தேவேந்திர குல சமுதாயத்தினரின் கலாசாரத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமுள்ளது. அவர்கள் நல்லிணக்கம், நட்பு, சகோதரத்துவம் கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் நலன்

இலங்கையில் உள்ள நமது தமிழ் சகோதர, சகோதரிகளின் விருப்பம், நலன் மீது நமது அரசு எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஒரே இந்திய பிரதமர் நான்தான் என்பதில் எனக்கு பெருமை. கடந்த காலத்தை விட அதிகமான வளங்களை, அந்நாட்டில் நமது அரசு தமிழர்களுக்காக வழங்கியுள்ளது.

வடக்கு - கிழக்கு இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள், தேயிலைத் தோட்டப் பகுதிகளில் 4 ஆயிரம் வீடுகள், தமிழ் சமுதாயத்தினருக்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவை, திக்கோயாவில் ஒரு மருத்துவமனை, ரெயில் இணைப்பை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்துக்கு ரெயில்வே கட்டமைப்பு, இது மன்னார் வரை மறுகட்டமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் விரைவில் இயக்கப்படவுள்ளன. இந்தியா கட்டியுள்ள யாழ்ப்பாணம் கலாசார மையம் விரைவில் திறக்கப்படும் என்று நம்புகிறேன். இலங்கை தலைவர்களிடம் தமிழர்களின் உரிமைகள் பற்றி நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய நாங்கள் எப்போதும் உறுதி பூண்டுள்ளோம்.

தமிழக மீனவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும்

நமது மீனவர்கள் நீண்ட கால பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். அவர்களது உரிமைகளை எனது அரசு எப்போதும் பாதுகாக்கும் என்று உறுதி அளிக்கிறேன். இலங்கையில் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும்போதெல்லாம், அவர்களை விரைவாக விடுதலை செய்வதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.

1,600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் எனது ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இலங்கையின் பிடியில் எந்த இந்திய மீனவரும் இல்லை. 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகளை மீட்டுக் கொண்டுவர முயற்சி எடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story