எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் விலகல்


எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் விலகல்
x
தினத்தந்தி 16 Feb 2021 12:11 AM GMT (Updated: 16 Feb 2021 12:11 AM GMT)

அமைச்சர் பதவியை தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் விலகினார். இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரி, 
அமைச்சர் பதவியை தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் விலகினார். இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் 
புதுவை காங்கிரஸ் அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ். இவர் ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார். இவர் ஆந்திர மாநில அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.  இதைத்தொடர்ந்து ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசியுள்ளார். ஏனாமில் நடந்த அவரது சட்டமன்ற வெள்ளிவிழாவில் புதுவை அரசியலில் இருந்து ஓய்வுபெறப்போவதாக அதிரடியாக அறிவித்தார்.
திடீர் ராஜினாமா 
புதுவை சட்டமன்றத்தில் நடந்த பாராட்டு விழாவிலும் வருகிற தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று திட்டவட்டமாக அவர் கூறினார். இதற்கிடையே தனது அமைச்சர் பதவியை கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி ராஜினாமா செய்து முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் கொடுத்தார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை. 
இந்தநிலையில் தற்போது தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்து சபாநாயகருக்கு மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் திடீரென கடிதம் அனுப்பியுள்ளார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப் படுமா? என்று தெரியவில்லை. ஏனெனில் எம்.எல்.ஏ. ஒருவர் ராஜினாமா செய்தால் அதற்கான கடிதத்தை சபாநாயகரை நேரில் சந்தித்து கொடுக்க வேண்டும் என்பது விதியாகும்.
எண்ணிக்கை குறைந்தது 
புதுவை சட்டமன்றத்தை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 என 33 பேர் இருப்பார்கள். கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது.
சமீபத்தில் பாரதீய ஜனதாவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 29 ஆக குறைந்துள்ளது.
ஆட்சிக்கு ஆபத்தா? 
இதில் ஆளும்கட்சிக்கு காங்கிரஸ் 11 (சபாநாயகர் உள்பட), தி.மு.க. 3, சுயேட்சை 1 என 15 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4, பா.ஜனதா (நியமனம்) 3 என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே தற்போதைய நிலையில் ஆட்சிக்கு ஆபத்து ஏதும் இல்லை. ஆளும்கட்சி வரிசையில் வேறு யாரேனும் கட்சி மாறினாலோ, பதவியை ராஜினாமா செய்தாலோ காங்கிரஸ்   ஆட்சிக்கு  ஆபத்தாகி விடும்  என்பது குறிப்பிடத் தக்கது.

Next Story