தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 21-ந் தேதி முதல் விருப்ப மனு கமல்ஹாசன் அறிவிப்பு + "||" + Kamal Haasan's announcement of the first option petition for those who want to contest the election on the 21st
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 21-ந் தேதி முதல் விருப்ப மனு கமல்ஹாசன் அறிவிப்பு
தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்கி விட்டோம்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்கி விட்டோம். இந்த தேர்தலில் வென்று மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய முடியும் எனும் நம்பிக்கை உடையவர்கள் வருகிற 21-ந் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். ஒருவரே எத்தனை தொகுதிகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தகுதியான வேட்பாளரைப் பரிந்துரைத்தும் விருப்ப மனுக்கள் அனுப்பலாம்.
இந்தமுறை ஆன்லைனிலேயே (www.maiam.com) சுலபமாக விண்ணப்பிக்கும் வகையில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்திய அரசியல் கட்சிகளிலேயே ‘ப்ளாக்செயின்' தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி விருப்பமனுக்களைப் பெறும் கட்சி எனும் பெருமையை அடைகிறோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் தலைமை அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கட்சியின் உறுப்பினர் அல்லாதவர்களும் கூட தங்களுக்கு சட்டமன்ற உறுப்பினராவதற்குரிய தகுதியும், திறமையும், மக்கள் பணியில் ஆர்வமும், நேர்மையும் இருக்கிறது என கருதினால் விண்ணப்பிக்கலாம். ஒரு தொகுதிக்கு ஒரு முறை விண்ணப்பிக்க ரூ.25 ஆயிரம் நிதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கட்சியின் தேர்தல் செலவினங்களுக்காக பயன்படுத்தப்படும். தங்களது விண்ணப்பம் தேர்வானாலும், ஆகாவிட்டாலும் இந்த தொகை திருப்பி அனுப்பப்படமாட்டாது. நேர்மையான ஜனநாயகத்திற்கான உங்கள் பங்களிப்பாக அத்தொகை இருக்கும்.
இந்த தேர்தல் தனக்கும், தன்னுடைய கட்சியினருக்கும் புதிய அனுபவம் என்றும், மண், மொழி, மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.