குரூப்-1 முதல்நிலை தேர்வில் தற்காலிகமாக தேர்வான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மார்ச் 15-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்


குரூப்-1 முதல்நிலை தேர்வில் தற்காலிகமாக தேர்வான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மார்ச் 15-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 16 Feb 2021 3:05 AM GMT (Updated: 16 Feb 2021 3:05 AM GMT)

குரூப்-1 முதல்நிலை தேர்வில் தற்காலிகமாக தேர்வான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மார்ச் 15-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.

சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் குரூப்-1 தேர்வில் (2020) அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 16-ந் தேதி (இன்று) முதல் மார்ச் 15-ந் தேதிக்குள் (அரசு வேலை நாட்களில்) மாலை 5.45 மணிக்கு முன்னர் தங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் எண்ணினை ஒரு முறை பதிவேற்றத்தில் (ஓ.டி.ஆர்.) இணைத்தால் மட்டுமே அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும். மேலும், முதல்நிலை எழுத்து தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கான தேர்வு கட்டணம் ரூ.200-ஐ டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு மார்ச் 15-ந் தேதிக்கு முன்னர் கண்டிப்பாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே அவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும். மேலும், விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்று கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story