பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து சமையல் கியாஸ் விலை ரூ.52 உயர்வு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு


பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து சமையல் கியாஸ் விலை ரூ.52 உயர்வு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 Feb 2021 5:44 AM GMT (Updated: 16 Feb 2021 5:44 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.52 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 2-வது முறையாக விலை ஏற்றப்பட்டதற்கு அரசியல் கட்சி தலை வர்கள், பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

சென்னை, 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 12-ந்தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.44-க்கும், டீசல் ரூ.83.52-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தினமும் அதிகரிப்பு

அதன்பிறகும், தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. 13-ந்தேதி ரூ.90.70 ஆக இருந்த பெட்ரோல் விலை 14-ந்தேதி 26 காசுகள் அதிகரித்து, ரூ.90.96-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மேலும் 23 காசுகள் அதிகரித்து ரூ.91.19 என்ற விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், 13-ந்தேதி ரூ.83.86-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல், 14-ந்தேதி 30 காசுகள் அதிகரித்து ரூ.84.16-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மேலும் 28 காசுகள் அதிகரித்து ரூ.84.44-க்கு டீசல் விற்பனை செய்யப்பட்டது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

இவ்வாறு, பெட்ரோல்-டீசல் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருவது, வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வருவதும் இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், ஓட்டல்கள் மற்றும் பிற வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பிரதேசங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு 5 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

மானியம் குறைந்தது

தமிழகத்தில் 2.38 கோடி கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் நிலவரத்துக்கு ஏற்ப மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.714 ஆகவும், மானியம் ரூ.174.72 ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.569 ஆக இருந்தது. ஆனால் மானியம் கொடுக்கப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.606 முதல் ரூ.881 வரை வெவ்வேறு விலைகளில் இருந்தது. அப்போது வாடிக்கையாளர்களுக்கு மானியமாக ரூ.25.45 மற்றும் ரூ.23.95 என குறைந்த அளவிலேயே செலுத்தப்பட்டது. சிலருக்கு மானியம் வங்கி கணக்கில் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

மக்கள் தவிப்பு

இந்தநிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் ரூ.660 ஆக இருந்த கியாஸ் சிலிண்டர் விலை மாத இறுதியில் ரூ.50 உயர்ந்து ரூ.710-க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது, மானியமாக ரூ.24.95 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

கடந்த மாதத்திலும் (ஜனவரி) கியாஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக தொடர்ந்த நிலையில், இம்மாதம் 4-ந்தேதி ரூ.25 அதிகரித்து ரூ.735-க்கு விற்பனையானது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் கடும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், இவ்வாறு அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருவது கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.52.50 உயர்வு

இந்த நிலையில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நேற்று ஒரே நாளில் ரூ.52.50 அதிகரித்து, இல்லத்தரசிகளை மிரளச்செய்தது. வீடுகளுக்கு நேற்று வினியோகிக்கப்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.787.50 என்ற விலையில் வழங்கப்பட்டது.

ஒரே நாளில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்ததற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுமக்களும் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளதுடன், கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராகுல் காந்தி

சமையல் கியாஸ் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஒடிசா மாநிலத்தில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 6 மணி நேரம் முழுஅடைப்பு நடைபெற்றது. இதனால் சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. 

Next Story