பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து


பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 16 Feb 2021 11:56 PM GMT (Updated: 17 Feb 2021 12:11 AM GMT)

பெட்ரோல், டீச், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

கோவை,

பெட்ரோல், டீச், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கோவை, நீலகிரி மாவட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.அது பற்றி பார்க்கலாாம்:-

கவுண்டம்பாளையம் அம்சவேணி (குடும்ப தலைவி) :- 

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் குடும்ப வருமானம் குறைந்து உள்ளது. ஆரம்பத்தில் மானியவிலையில் வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியம் உடனுக்குடன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அப்போது ஒரு சிலிண்டருக்கு மானியமாக ரூ.250 வரை கிடைத்தது. ஆனால் தற்போது ரூ.24 வரை தான் மானியத்தொகையாக வழங்கப்படுகிறது. இதனால் சிலிண்டர்களுக்கு கூடுதல் பணம் கொடுப்பதால் அதிக செலவு ஏற்படுகிறது. எனவே மீண்டும் பழைய முறைப்படி கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய வேண்டும்.

பன்னிமடை ராஜா (தொழில்முனைவோர்) :- 

மூலப்பொருட்கள் விலை உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்களில் 30 சதவீதம் வரை வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது. பல தொழில் முனைவோர்கள் தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை அடைக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொழில்முனைவோர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்படும் என்பதால் மூலப்பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அத்திப்பாளையம் சத்யஷீலா (குடும்பதலைவி) :- 

மத்திய அரசு கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தை விட்டு கொடுக்க வேண்டும் என்று அறிவித்த போது நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தங்களது மானியத்தை விட்டு கொடுத்தனர். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமானது. ஆனால் தற்போது மானியம் அல்லாத சிலிண்டர் விலையை ஒரே நாளில் ரூ.50 -க்கு மேல் உயர்த்தி விட்டனர். இதனால் மானியம் விட்டுக்கொடுத்தவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

உருமாண்டம்பாளையம் ஜெயந்தி (குடும்பதலைவி):- நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை பார்த்தால் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்படுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. வேலை இழப்பினால் குடும்பத்தின் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. தற்போது சின்ன வெங்காயம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு சென்று உள்ளது. இந்த நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறிகள், மளிகை பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும். இதனால் நடுத்தர குடும்பங்கள் சிக்கன நடவடிக்கைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

சின்னவேடம்பட்டி சுரேஷ் (கடைக்காரர்) :- 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மாதசம்பளம் பெறுபவர்களை கடுமையாக பாதிக்கும். அவர்கள் பணிக்கு செல்வதற்கு இனி பஸ்களை நாடும் நிலைதான் ஏற்படும். மேலும் மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறும் என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

பொள்ளாச்சியை சேர்ந்த ரதிபிரியா:- 

கொரோனா காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ளது. இன்னும் கொரோனா பாதிப்பில் இருந்து மீளவில்லை. இதற்கிடையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ரூ.660 ஆக இருந்த கியாஸ் சிலிண்டர் விலை, மாத இறுதியில் ரூ.50 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒரே நாளில் ரூ.52.50 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. சுமார் 4 பேர் இருக்க கூடிய குடும்பங்களுக்கு சராசரியாக 30 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் வருகிறது. தற்போதைய விலை உயர்வு காரணமாக மாதம் ரூ.1000 வரை செலவு செய்ய வேண்டிய உள்ளது. கொரோனா காரணமாக போதிய வேலை, வருமானம் இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே அரசு இதை பரிசீலனை செய்து சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.

கோதவாடியை சேர்ந்த கணேசன் ( ஆட்டோ டிரைவர்):-

கொரோனா பாதிப்பிற்கு ஆட்டோ தொழில் மேம்படவில்லை. பள்ளிகள் திறந்து இருந்தால் தினமும் வாடகை கிடைக்கும். ஆனால் தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் கொரோனாவிற்கு ஆட்டோவில் குழந்தைகளை அனுப்ப பெற்றோருக்கு விருப்பம் இல்லை. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். கடனுக்கு வாங்கிய ஆட்டோவுக்கு வட்டியை கூட கட்ட முடியாத நிலையில் உள்ளோம். இந்த நிலையில் தற்போது பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது.

ஊட்டியை சேர்ந்த பஞ்சமி ஆர்த்தி (குடும்ப தலைவி):-

கொரோனா பாதிப்பால் மக்கள் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வரும் நிலையில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.800-ஐ கடந்து உள்ளது. சமவெளி பகுதிகளில் இருந்து லாரிகளில் சிலிண்டர்கள் கொண்டு வருவதால் மற்ற இடங்களை பார்க்கிலும் நீலகிரியில் விலை அதிகமாக இருக்கிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் மானிய விலை குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சமையல் செய்வதற்கு அத்தியாவசிய தேவையான சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊட்டியை சேர்ந்த கோவர்த்தன்:- (சுற்றுலா கார், சுமோ ஓட்டுனர் நலச்சங்க தலைவர்)

மலைப்பிரதேசம் என்பதால் வாகனங்களின் உந்து சக்திக்கு ஏற்ப டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருள் அதிகமாக விரயமாகிறது. இதனால் வேலைக்கு செல்லும் வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே, டீசல், பெட்ரோல் மீதான விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.

ஊட்டி நொண்டிமேடு பாரதி (குடும்ப தலைவி):-

நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. இதனால் வீடுகளில் சமையல் செய்யவும், தண்ணீரை சூடாக்கவும் சமையல் கியாஸ் சிலிண்டர் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் கியாஸ் விரைவில் காலியாகும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் மற்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை இருக்கிறது. இது எங்களுக்கு எதிர்பார்க்காத உயர்வு....எப்படித்தான் இருக்குமோ எங்கள் வாழ்வு என்கிற நிலையில் உள்ளோம். எனவே, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story