முறைகேடாக முன்பதிவு செய்யப்பட்ட ரூ.75 லட்சம் ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல்


முறைகேடாக முன்பதிவு செய்யப்பட்ட ரூ.75 லட்சம் ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Feb 2021 2:39 AM GMT (Updated: 17 Feb 2021 2:39 AM GMT)

தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில், ஆன்லைன் மூலம் முறைகேடாக முன்பதிவு செய்யப்படும் ரெயில் டிக்கெட்டுகளை கண்டுபிடிக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னை,

தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில், ஆன்லைன் மூலம் முறைகேடாக முன்பதிவு செய்யப்படும் ரெயில் டிக்கெட்டுகளை கண்டுபிடிக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் சந்தேகத்துக்கு இடமாக சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வில்லிவாக்கம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் முறைகேடாக 4 ஆயிரத்து 541 ஆன்லைன் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த கடை உரிமையாளர் மோகன் (வயது 55) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வில்லிவாக்கம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கூறியதாவது:-

ரெயில்வே பாதுகாப்பு படை ‘சைபர் கிரைம்’ பிரிவின் அறிவுறுத்தலின்படி, அண்ணாநகரில் உள்ள கடையில் சோதனை மேற்கொண்டோம். அப்போது முறைகேடாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ரூ.14 ஆயிரத்து 902 மதிப்புள்ள 15 ரெயில் டிக்கெட்கள் இருந்தது. தொடர்ந்த நடத்தப்பட்ட விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் மோகன் முறைகேடாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி, அவரது கணினியில் சோதனை செய்தோம். அதில் இதுவரை அவர் ரூ.75 லட்சத்து 67 ஆயிரத்து 625 மதிப்புள்ள 4 ஆயிரத்து 541 ரெயில் டிக்கெட்டுகள் முறைகேடாக ஆன்லைனில் முன்பதிவு செய்தது தெரியவந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story